ஆயுளை அதிகரிக்கும் யோகா– ( பகுதி-05 )

ஆயுளை அதிகரிக்கும் யோகா– ( பகுதி-05 )

Share it if you like it

நமது இந்து மதத்தில் உள்ள வழிபாடு முறைகள், சாங்கியங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் இவை அனைத்தும் இயற்கையோடும் அறிவியலோடும் பிணைக்கப்பட்டுள்ளது. நமது புண்ணிய பூமியில் தோன்றிய மகான்கள், சித்தர்கள் , யோகிகள், ஞானிகள் , மாமுனிகள், அறிஞர்கள் இவர்கள் எழுதிய தத்துவங்கள், இலக்கியங்கள், வான சாஸ்திர நூல்கள், யோகா கலை போன்ற எண்ணற்ற பொக்கிஷங்கள் அனைத்தும் அறிவியலோடும், ஆன்மீகத்தோடும் பிணைக்கப்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் எப்படி கோவில்களில் வழிபாட்டு முறைகள் என்று ஒன்றை ஏற்படுத்தி அதில் ஆன்மீகத்தையும், அறிவியலையும் சேர்த்து உருவாக்கினார்களோ அதுபோல யோகா கலை என்ற ஒன்றை உருவாக்கி நம்முடைய சந்ததியினருக்கு பயன்படும் வகையில் எழுதியுள்ளார்கள். விலங்குகள், பறவைகள், மரங்கள் என்று இயற்கையோடு வாழ்வது தான் மனிதனின் இயல்பு அதன் அடிப்படையில் யோகாசனத்தை நமது முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.

விருக்ஷாசனம்:

விருச்சம் என்றால் மரம். மரம் போல நிற்கும் நிலை என்பதால் விருச்சாசனம் என்ற பெயர் பெற்றது.

சூரிய நமஸ்காரம்:

நமது முன்னோர்கள் காலையிலும், மாலையிலும் சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர். இதை செய்வதன் மூலம் உடலில் புத்துணர்ச்சி அடையும். இது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

மனித உடலின் மூன்று நிலைகள் உள்ளன. வாதம், பித்தம், கபம் இந்த மூன்று கூறுகளும் சமனற்ற நிலையில் இருந்தால் உடலில் பல கோளாறுகள் ஏற்பட காரணமாகிறது வாதம் தொடர்பாக 80 வகையான கோளாறுகள், பித்தம் தொடர்பாக 40 வகை கோளாறுகள், கபம் தொடர்பாக 20 வகை கோளாறுகள் ஏற்படலாம். நாடி பரிசோதனை மூலம் இந்த மூன்று நிலைகளில் எந்த நிலையில் கோளாறு உள்ளது என்று கண்டறியலாம். நமது உடலில் 72000 நாடிகள் உள்ளது. இந்த நாடிகளை சீராக வைத்துக்கொள்ள சிறந்த யோகா பயிற்சியினை செய்வதன் மூலம் இந்த கோளாறுகளை சரிசெய்ய முடியும் என்பதை அறிவியல் ரீதியாக ஒப்புக் கொண்டவையாகும்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் மிகவும் தொன்மையான முறையாகும். 18 சித்தர்களால் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியே யோகா. திருமூலர், பதஞ்சலி சித்தர் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். சித்த மருத்துவத்தில் யோகம், ஞானம், வைத்தியம் என்று பல பிரிவுகள் உள்ளன. யோகம் ஆன்மாவை நன்னிலை படுத்தவும், ஆன்மா அடங்கிய உடலை நோய் வராமல் தடுப்பதும் இந்த யோகா மருத்துவத்தின் செயல்பாடாகும்.

பிராணாயாமம், தியானம் இவைகள் செய்து ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன் மூலம் சக்தி மற்றும் இளமை ஆகியவற்றை அதிகப்படுத்தி நீண்ட ஆயுள்,ஆரோக்கியம் பெற முடியும். என்று திருமூலர் கூறியுள்ளார்.

“யோகா சித்த விருத்தி நிரோதனா” என்று பதஞ்சலி எழுதிய யோக சூத்திரத்தில் கூறியுள்ளார். இதன் பொருள் யோகம் என்பது உன் சித்தத்தை மேம்படுத்தி பிரச்சனைகள் இன்றி நிர்வகிக்கிறது.

யோக முறையை தற்காலத்தில் இரு வகைகளாக பயன்படுகிறது. யோகப்பயிற்சி, யோக சிகிச்சை ஆகும்.

யோகப் பயிற்சி:

உடலையும், மனதையும் தியானம், உடற்பயிற்சி மூலம் சரியான சமநிலையில் வைத்திருப்பதே யோகா பயிற்சி ஆகும்.

யோக சிகிச்சை:

ஒருவரின் உடல் குறைபாடுகள், மனக் குறைபாடுகள் கண்டு அதற்கான யோக பயிற்சியை அளிப்பது அதாவது அஷ்டாங்க யோகத்தை மருந்தாக கொடுப்பதுதான் யோக சிகிச்சை எனப்படும். இந்த சிகிச்சையை நன்கு பயிற்சி பெற்றவர் அனுபவம் உடையவர் தான் கொடுக்க முடியும்.

நமது சித்தர்களும், முனிவர்களும் இதனை அனுபவித்து, ஆராய்ந்து தான் நமக்கு வழங்கியுள்ளார்கள். இதனால்தான் இந்த யோகாசனப் பயிற்சியையும், சிகிச்சையையும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு யோகாசன முறையை பின்பற்றி வருகிறார்கள்.

இவ்வாறாக யோகாவும் மருத்துவமும் அறிவியலோடு பிணைக்கப் பட்டுள்ளது என்பதை நமது சித்தர்கள் நமக்கு தெளிவாக உணர்த்தியுள்ளார்கள். இந்த யோகப் பயிற்சியும், யோகா சிகிச்சையும் முறையாகப் பயின்று நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நமது பொறுப்பாகும்.


Share it if you like it