கேரள அமைச்சரின் அப்பட்டமான பொய்
மத்திய அரசு ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களைப் பொதுத்துறை-தனியார் பங்களிப்பு முறையில் விரிவாக்கம்
செய்ய நேற்று முடிவெடுத்தது. மத்திய அரசின் இந்த அனுமதியின் மூலம் தனியார் நிறுவனங்கள் இந்த விமான நிலையங்களில் முதலீடுகளைச் செய்து 50 ஆண்டுகளுக்கு நிர்வாகம் செய்து கொள்ளலாம். 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த விமான நிலையங்கள் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இந்த மூன்று விமான நிலையங்களில் முதலீடு செய்து நிர்வாகம் செய்வதற்காக, அதானி நிறுவனம் உடனடியாக மத்திய அரசுக்கு 1070 கோடி ரூபாய்களை வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .
ஒப்பந்தங்களில் போட்டியிட்ட நிறுவங்களில், அதானி நிறுவனம் மட்டுமே அதிகத் தொகை குறிப்பிட்டு இந்தப் பொது-தனியார் முதலீடு திட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த மூன்று விமான நிலையங்களையும் சேர்த்து, அதானி நிறுவனம் மொத்தம் ஆறு விமான நிலையங்களில் முதலீடு செய்து விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. லக்னோ, அஹமதாபாத் மற்றும் மங்களூர் விமான நிலையங்கள் மற்ற மூன்று ஆகும்.
இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தொடர்பாகக் கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கின் ட்வீட் தற்போது சர்சை ஆகி உள்ளது. தனது டீவீட்டில் கேரள அரசு நிறுவனமான ‘கேரளா தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் ஒப்பந்தக் கோரிக்கையை மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை நிராகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி உள்ளார். தங்கள் மாநில நிறுவனம் அதானி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொகையை ஈடு செய்யும் என்ற உறுதியை பிரதமர் அலுவலகத்துக்கு கொடுத்தும், திருவனந்தபுரம் விமான நிலையம் அதானி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறி உள்ளார்.
ஆனால் கேரள அமைச்சர் தவறான தகவலைக் கூறி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் கோரிய ஒப்பந்தத் தொகை 168 ரூபாய் (ஒரு உள்ளாட்டுப் பயணிக்கு) என்றும், கேரள அரசின் நிறுவனம் கோரியது 135 ரூபாய் (ஒரு உள்நாட்டுப் பயணிக்கு) மட்டுமே என்றும் கூறியுள்ளது.
உண்மையான தகவல்களைக் கூறாமல் இந்தத் திருவனந்தபுரம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தில் கேரள நிதி அமைச்சர் அரசியல் செய்வதாகப் பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.