ஒரு சமயம் அனந்தாழ்வான் பெருமானுக்காகப் பூமாலை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது வேங்கடாசலபதி அனந்தாழ்வானைக் கூப்பிட்டு அனுப்பினான். அழ்வான் உடனே செல்லவில்லை. தொடர்ந்து பூ மாலைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்.
பூ மாலைகளைக் கட்டி முடித்த பின், அவற்றை எடுத்துக் கொண்டு மலையப்பனிடம் சென்றார்.பெருமான், “உம்மைக் கூப்பிட்டு அனுப்பினேன். ஏன் உடனே வரவில்லை?” என்று கேட்டான்.
ஆழ்வான், ” எனக்கு உம்மைவிட, என் குரு தான் முக்கியம். குரு சொன்னதால் தான், நான் தோட்டம் அமைத்து, உமக்குப் பூ மாலைகளை அர்ப்பணிக்கிறேன். குரு உத்தரவுப்படி பூ மாலைகள் கட்டிக் கொண்டிருந்தால் தான் உடனே வரவில்லை” என்று சொன்னார்.
பெருமான், “இந்தத் திருமலையை விட்டு வெளியேறும் படி நான் சொன்னால், என்ன செய்வீர்?” என்று கேட்டான்.
ஆழ்வான், “அப்படிச் சொல்வதற்கு உமக்கு உரிமை கிடையாது. இந்த மலை உமக்குச் சொந்தமானது அல்ல. நீரும் என்னைப் போல இங்கே புதிதாக வந்தவர் தான். இந்தத் தலபுராணம்* திருமால் வைகுண்டத்தை விட்டு, இங்கே வந்து லட்சுமியுடன் வசிக்கிறான் என்று கூறுகிறது.
இதையே நம்மாழ்வாரும், பரன்* சென்று சேர் திருவேங்கட மாமலை.’ என்று கூறுகிறார்.
ஆகவே, நீரும் என்னைப் போல இந்த மலைக்கு வெளியில் இருந்து வந்தவர் தான். நீர் சற்று முன்னால் வந்தீர். நான் சற்றுப் பின்னால் வந்தேன். அவ்வளவுதான் வித்தியாசம். அதனால் என்னைத் திருமலையை விட்டு வெளியேறும் படிச் சொல்ல உமக்கு உரிமை இல்லை. அதிகாரமும் இல்லை” என்றார்.
அதைக் கேட்டு மலையப்பன் மலைத்து நின்றார். இது தான் தூய பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
தட்டச்சு : கதிர் கலியமூர்த்தி.