மக்களுக்கு பாதை காட்டிய கீதை – மறைந்த மேதை கண்ணதாசன்!

மக்களுக்கு பாதை காட்டிய கீதை – மறைந்த மேதை கண்ணதாசன்!

Share it if you like it

                          கவியரசர் கண்ணதாசன் பார்வையில் மஹா பெரியவா!

“காஞ்சி பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 60 ஆண்டுகள் போனால், “இந்து மதம் என்றால் என்ன?” என்று கேட்டால், “மஹா பெரியவர்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் ”

கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு “அர்த்தமுள்ள இந்து மதம்” புத்தகத்தில் கூறியது.உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல ஸரீரத்துடன் நடமாடிக் கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.

‘அர்த்தமுள்ள இந்து மதம்” நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.

மஹா பெரியவா 1973ம் ஆண்டு, தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் “அர்த்தமுள்ள இந்துமதம்” எழுதிக் கொண்டிருந்தார்.

                                 அவர் எழுதிய அத்தியாயம் இது.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கை வந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர். அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார் இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மஹா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார். தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது. பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது.

முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை. அவர்களே முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், “தெய்வம் அவர்களோடு பேசுகிறது” என்று பொருள்.ஸ்ருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டு பிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்யம். படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை. உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.

அதோ, அந்த ஒளியோடு அந்த மஹா யோகி போய்க் கொண்டிருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று. அது ஆன்ம யாத்திரை நாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார். அந்தக் கால்களிலும் காலணி இல்லை, இந்தக் கால்களிலும் காலணி இல்லை

ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது. காலணிகள் ஏதும் அணியாமல் வெற்று பாதத்துடன் மஹா பெரியவா யாத்திரை செய்து கொண்டிருந்தபோது.மஹா நதி பாறையின் மீது மோதினாலும், நதி சேதமடைவதில்லை. நாளாக நாளாக பாறை தான் அளவில் சுருங்குகிறது. கங்கை நதியில் எவ்வளவு தண்ணீர் ஓடினாலும் சக்ரவாகப் பக்ஷி பனித்துளியைத் தான் நாடுகிறது.

”மஹாராஜக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது.ஆந்தராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப்படவில்லை. அங்கு போய்க் காஞ்சிப் பெரியவர் ஓரிரவு தங்கினாராம். “ஸ்வாமி ப்ரதிஷ்டை ஆகி விட்டார்” என்று ஆந்திர மக்களெல்லாம் சந்தோஷப்பட்டார்களாம்.

‘‘அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலைமையை உண்டாக்கக் கூடாது. ஒரு உத்தமமான யோகியை பிராமணர் என்று ஒதுக்கி விடுவது புத்தியுள்ளவன் காரியம் ஆகாது.

உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் பேரொளி அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் 60 வருஷங்கள் போனால், “இந்து மதம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு “ஸ்ரீ மஹாஸ்வாமிகள்” என்ற “சங்கராச்சாரிய சுவாமிகள்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

அந்த ஞானப் பாசத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும், செஞ்சி கோட்டைக்குப் போகிறவர்களெல்லாம் ராஜா தேசிங்கு அல்ல காவி கட்டிய எல்லோருமே மஹா யோகிகள் அல்ல ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு, ஆகிய அனைத்தும் சேர்ந்த மஹாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.

அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார் சாலையின் இரு மருங்கிலும் அந்த யோகியைத் தரிசிக்க ஜனக் கூடம் திரள்கிறது. இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்த அந்த வரம் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும் பொது, அவரைப் பற்றிப் பாட வேண்டும்.பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களில் அவரைப் பற்றிக் குறிக்க வேண்டும்.

மேதைகளும், கற்புக்கரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். பசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம், யோகிகளில் ஒரு சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக் கூடாது.என்றால் இந்த மகா யோகியைப் பிராமணதல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் ?

                       அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.

பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே!

                        அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்.  

அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள், அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்.

                                                  ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர


Share it if you like it