வரலாற்று பக்கம் – அலெக்சாண்டர் – புருஷோத்தமன்..!

வரலாற்று பக்கம் – அலெக்சாண்டர் – புருஷோத்தமன்..!

Share it if you like it

பின்வாங்குவதையே அறியாமலிருந்த ‘தி கிரேட் அலெக்சாண்டரின்’ படை, பண்டைய பஞ்சாப் பகுதியை ஆண்ட ‘போரஸ்’ எனும் புருஷோத்தமனின் யானை படையைப் பார்த்து முதல்முதலில் பின் வாங்கிய காலம் அது.

எதிரியின் சரணாகதி, போருக்கு பின் தன்னை எதிர்த்த மன்னனுக்கு நிரந்தர அமைதி, சிறிது சதி என்று வருடங்களைக் கழித்து வந்த அலெக்சாண்டருக்கு அந்த ‘ஹைடஸ்பேஸ் போர்’ தரவிருக்கும் புது அனுபவங்கள் பற்றி அதற்கு முன்புவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தத்துவங்கள், கலாச்சாரங்கள், கல்வியறிவு, போர் கலைகள், ஜனநாயகம் ஆகியவற்றில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தனது சிந்தனைகளைச் செலுத்தியவர்கள் கிரேக்கர்கள். போர் தொழிலில் அவர்களை வெல்வதென்பது அவ்வளவு எளிதல்ல.

உள்நாட்டு கலவரங்களை அடக்கி மொத்த கிரேக்கத்தையும் தன் கைக்குள் கொண்டுவந்த மாவீரன் அலெக்சாண்டர், பாரசீக அரசுகளையும் எகிப்திய அரசுகளையும் விட்டு வைக்கவில்லை. வடகிழக்கு ஆப்ரிக்கா, மேற்கு ஆசியாவை வென்ற, ஆசியாவின் கடவுளான அலெக்சாண்டரின் பார்வை இந்தியா மீது விழுந்தது. இல்லை, இந்தியா ஈர்த்தது.  இந்தியாவின் சுபாவமே ஈர்ப்பு தானே. அதில் ஆண்டி, அரசன் என்று எல்லாம் பாரபட்சம் ஏது!

ஆனால் இந்தியாவினுள் போர் தொடுத்து வருவது ஈர்ப்பு என்ற வார்த்தையைப் போல் எளிதல்ல. வடக்கே இமயமும் மேற்கே சிந்து நதியும் அரணாக இருந்து அந்நியர்களைத் திணறடிக்கும். கிட்டத்தட்ட 10 வருடங்கள் போர் மட்டுமே கதி என்றிருந்த அலெக்சாண்டரின் படை எப்போது சொந்த நாட்டுக்கு திரும்புவோம் என்றிருக்கையில் இந்தியாவை வெல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார் அந்த மாவீரர்.

அதற்காக முதலில் தக்சசீல நகரை முற்றுகையிட்ட அலெக்சாண்டரிடம் ‘தக்சசீல மன்னன் அம்பி’ சரணாகதியை வெளிப்படுத்தி, பின் தனது பரம எதிரியான பௌரவர்களை வெல்ல அலெக்சாண்டரிடம் வலியுறுத்தினான். பௌரவர்களை அலெக்சாண்டர் மூலம் வென்று அந்த பகுதியை அம்பி ஆள வேண்டும் என்பது ஒப்பந்தமாக கூட இருக்கலாம். துரோகமும் சதியும் சூழ்ச்சியுமில்லாத வரலாறு சுவாரசியமற்றது தானே!

ஹைடஸ்பேஸ் நதியில் ஒருபுறம் பௌரவ மன்னரான போரஸின் படையும், மற்றொரு புறம்‌ அலெக்சாண்டரின் மாசிடோனிய படையும் முகாமிட்டது. வெள்ளம் பெருக்கெடுக்கும் நதி, கடக்க இயலாத நிலை‌. இன்னும் சிறிது காலத்தில் மழைக்காலம் வரவிருக்கிறது. இப்போதே நதியைக் கடக்க வேண்டும் என்ற கட்டாயம். இல்லையென்றால் இன்னும் பல காலம் கரையிலேயே காத்திருக்க வேண்டியதுதான். கடக்க முடிவெடுத்தார் அலெக்சாண்டர்.

தான் முகாமிட்டிருந்த இடத்திலிருந்து கரையிலேயே பல கிலோமீட்டரைக் கடந்துவந்து, ஆழம் குறைவான இடத்தைக் கண்டறிந்தனர் அலெக்சாண்டரின் படையினர். அதன் வழியாக நதியைக் கடக்க வேண்டும் என்பது திட்டம். ஆனால் மொத்த படையுடன் சென்றால் போரஸ் தன் திட்டத்தை அறிந்துக்கொள்வார். அதனால் பாதி படையுடன் போருக்குச் செல்ல முடிவெடுத்தார். இரவோடு இரவாக இந்தியர்கள் அறியா வண்ணம் நதியைக் கடக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தனது ஒற்றன் மூலம் செய்தியறிந்த போரஸ், முதலில் அதை நம்பவில்லை. வேறுவழியின்றி பாதுகாப்பிற்காக தனது படையில் சிறு பிரிவை அவரது மகன் தலைமையில் அனுப்பி வைத்தார். அந்த சிறு படையால் மாசிடோனிய படையைத் தடுப்பது இயலவே இயலாத ஒன்று. இருப்பினும் இளவரசனால் தந்தைக்கு செய்தி அனுப்பப்பட்டுவிட்டது.

செய்தியறிந்த போரஸ் போருக்கு தயாரானார். நடுவில் யானைப்படையும், இரண்டு புறத்தில் காலாட்படையும், குதிரைப்படையும் அணிவகுத்தது. எண்ணிக்கையில் சிறிது தான். ஆனால் எண்ணமும் வீரமும் சிறிதல்ல.  எதிரில் எண்ணிக்கையில் அதிகமான அலெக்சாண்டரின் படை அணிவகுக்கத் தொடங்கியது. நடுவில் குத்தீட்டி ஏந்திய வீரர்கள் படை. அது சாதாரண ஈட்டியல்ல. பன்னிரண்டு அடிக்கு மேல் உயரமுள்ள ஈட்டி. அந்த ஈட்டி அரணைத் தாண்டி உள் செல்வதெல்லாம் இயலாத காரியம். அதற்கு இரண்டு புறத்திலும் உலகத்தில் சிறந்த குதிரைப்படை. இத்தனைக்கும் இது மாசிடோனியாவின் பாதி படை மட்டுமே. இன்னொரு பாதி மற்றொரு கரையில் அதிசிறந்த போரைக் கண்டுகளிக்க தயாராக உள்ளது.

நூறு யானைகளைக் கொண்ட போரஸின் யானைப்படை எதிரிகளை நிலைகுலைய செய்தது. யானைப்படையையே பார்த்திராத கிரேக்கர்கள் வாழ்வில் முதல்முறையாக பின்‌வாங்குவதைத் தொடங்கிவிட்டார்கள். பௌரவ வீரர்களின் ஆறடி வில் ஒவ்வொரு மாசிடோனிய வீரனுக்கும் வில்லனாக மாறியது. அதிலிருந்து வரும் அம்பு குறைந்தது இரண்டு வீரர்களையாவது துளைத்துக் கொண்டிருக்கும். அதே நேரம் அகிலத்தில் சிறந்த குதிரைப்படையை ஒரு புறம் எதிர்த்து கொண்டிருந்தனர்.

கடுமையான போர். ஆம் அலெக்சாண்டருக்கு இது கடுமையான போர். இப்படிப்பட்ட படையை இதுவரையில் அவன் சந்தித்ததில்லை. இருப்பினும் தோல்வியை ஏற்கும் மனநிலை அங்கு எவருக்குமில்லை.

அலெக்சாண்டருக்கு நன்கு தெரிந்துவிட்டது. யானைப்படை இருக்கும் வரை வெற்றிக்கு வாய்ப்பில்லை என்று. தன் வீரர்களிடம் யானைகளை மட்டும் கொடூரமாக தாக்க ஆணையிட்டார் அலெக்சாண்டர். குத்தீட்டிகள் யானைகளைக் குத்தின. குருதி சிந்தின. ஹைடஸ்பேஸ் நதி முழுக்க சிவந்தன. அதே நதியை அக்கரையில் மீதமிருந்த மாசிடோனிய வீரர்களும் கடந்தன‌ர்‌.

வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்க போவதில் வியூகத்திற்கு பெரும்பங்கு உண்டு. அனுபவமிக்க அலெக்சாண்டரும் அதையே சிந்தித்தார். ஒரு புற வீரர்களை வேகமாக தாக்க சொன்னார். மற்றொரு புறம்‌ தாக்காமல் தடுக்க மட்டுமே ஆணையிட்டார். எண்ணிக்கையில் குறைந்த பௌரவ வீரர்களால் மொத்த கிரேக்க வீரர்களையும் கட்டுபடுத்த முடியவில்லை. போரின் போக்கு நிலையற்றது. நிலைமை மாறியது. கிரேக்கர்களின் கை ஓங்கியது.

அதிக தாக்குதல் நடக்கும் இடத்திற்கு தன் படை பலத்தை அதிகரித்தார் போரஸ். அது மாசிடோனியர்களுக்கு வழிவகுத்தது. சிறிது நேரத்தில் அலெக்சாண்டரின் படை எண்ணிக்கையில் சிறிய படையான போரஸ் படையைச் சுற்றியது. இருப்பினும் போரஸ் தோல்வியை ஏற்கவில்லை. சரணாகதி அவர் அகராதியிலேயே இல்லை. விடாமல் சண்டையிட்டார். அலெக்சாண்டரின் பாசமிக்க குதிரையை வென்றார். அலெக்சாண்டருக்கு பரிசாக பல காயங்களையும் தந்தார்.

வரலாற்று சிறப்புமிக்க அந்த ஹைடஸ்பேஸ் போரின் முடிவில் போரஸ் சிறைபிடிக்கப்பட்டார். போரில் அவரது வீரத்தையும், திறமையையும் பார்த்து வியந்த அலெக்சாண்டர், போருக்கு பின்‌ அவரது அறம் நிறைந்த குணத்தைப் பார்த்து, வென்ற பகுதியை போரஸிற்கே கொடுத்து விட்டார் என்பது வரலாறு. ஆனால் அதற்கு முன் 16 நாடுகளை வென்ற அந்த மாவீரர் ஒருமுறை கூட வென்ற நாட்டைக் கொடுத்ததாகக் குறிப்பில்லை. தன்னை எதிர்த்த மன்னர்களை எல்லாம் கொன்ற பழக்கம் மட்டுமே கொண்டவரான அலெக்சாண்டரின் வரலாற்றுப் போக்கையே மாற்றிய போரஸ் ஒரு சுத்த வீரர்!

இதில் வரலாற்றை சந்தேகித்தாலும் வெற்றி போரஸுடையது தான். அதை நம்பினாலும் அந்த வெற்றி அதே போரஸுடையது தான்..

– தினா. கே எஸ்


Share it if you like it