ஒரு செயலைச் செய்வது கடினம் என்றால், ‘கஜ கர்ணம் போட்டாலும் நடக்காது’, கோ கர்ணம் போட்டாலும் நடக்காது ‘ என்று சொல்வார்கள்.
‘ யானை மாதிரி குட்டிக் கர்ணம் போட்டாலும் நடக்காது ‘ என்ற கருத்தில் இதைச் சொல்வதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் பெரியவா அதன் உண்மையான அர்த்தம் சொல்கிறார் பாருங்கள் ….
விலங்குகளில் யானை மட்டுமே காதை விசிறி மாதிரி இயல்பாகவே ஆட்டிக் கொண்டிருக்கும் ஆற்றல் படைத்தது. இதற்கு ‘கஜ தாலம்’ என்று பெயர்.
‘தாலம்’ என்பதற்கு ‘பனையோலை விசிறி’ என்று பொருள். விசிறி போன்ற காதை, ஒரே சீராக தாளம் போடும் விதத்தில் அசைப்பது அதன் இயல்பு. மனிதர்களால் அப்படி காதை ஆட்ட முடியுமா?
அது மிகவும் சிரமமான வித்தை. அதையே ‘கஜ கர்ணம் போட்டாலும் நடக்காது ‘ என்பார்கள். அதுவே நாளடைவில் ‘கஜ கரணம்’ என்ற பொருளில் யானை மாதிரி குட்டிக் கரணம் போட்டாலும் நடக்காதாக்கும் என்று அர்த்தம் உண்டாகி விட்டது.
அதே போல ‘கோ கர்ணம்’ என்பதற்கும் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள். ‘ கோ ‘ என்றால் ‘பசு’ . இங்கு ‘கர்ணம்’ என்பது பசுவின் காதைக் குறிப்பதில்லை. இங்கு வினைச் சொல்லாக வரும் ‘கர்ணம்’ என்ற சொல்லிற்கு ‘குத்துவது, துளைப்பது’ என்று பொருள்.
மாட்டின் உடம்பில் விரல், அல்லது தார்க் குச்சி மூலம் குத்தினால், கோலமிட்டது போல அலை அலையாக உடம்பெங்கும் சலனம் பரவும். இதை மாதிரி மனிதர்களால் செய்து காட்ட முடியாது. இதுவும் ஒரு அபூர்வ வித்தையே.
இதனால் தான் நடத்த முடியாத செயல்களை, கஜ கர்ணம், கோ கர்ணம் என்ற வார்த்தைகளால் குறித்தனர்.
பெரியவா தந்துள்ள அற்புதமான விளக்கத்தைப் பார்த்தீர்களா!
ஹரஹரசங்கர
ஜெயஜெய சங்கர.
தட்டச்சு ; கதிர் கலியமூர்த்தி.