புதுச்சேரி சட்டமன்றத்தில் 30 சட்டமன்ற உறுப்பினர்களும் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்படுகின்றனர்.. இதனிடையே கடந்த 2016- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பின்பும் ஒரு வருடமாக நியமன சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்படாததால் மத்திய அரசானது நியமன சட்டமன்ற உறுப்பினராக பாஜக மாநில தலைவர் சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பித்தது.
கடந்த மாதம் நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் உயிரிழந்ததை அடுத்து புதிய நியமன சட்டமன்ற உறுப்பினராக பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் தங்க விக்ரமனை மத்திய அரசு நியமனம் செய்தது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையின் புதிய நியமன சட்டமன்ற உறுப்பினராக விக்ரமன் இன்று மாலை சட்டப்பேரவையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
சபாநாயகர் சிவகொழுந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன்., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.