மதுரையில் நேற்று அம்பேத்கர் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார் ; தமிழகத்துக்கு பட்டியலின மக்களின் நலனுக்காக, கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.10,446 கோடியை செலவு செய்யாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. சமூக நீதியின் பாதுகாவலர்கள் என தங்களை கூறிக்கொண்டு, பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
இதனால் தமிழக அரசை அம்பேத்கர் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்பதற்காக, அவரது சிலையிடம் மனு அளித்தோம். பட்டியலின மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்னும் ஏன் இருக்கிறார்? வெளியேறி விடலாமே?
பட்டியலின மக்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் வேங்கைவயல் சம்பவத்துக்காக ஏன் அவர் போராடவில்லை.? திருமாவளவனுக்கு பட்டியலின மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முரசொலி கட்டிடம் தொடங்கி, தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க பா.ஜ.க. அறை கூவல் விடுக்கிறது. இதை திருமாவளவன் ஆதரிப்பாரா? இதற்காக பா.ஜ.க. நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க திருமாவளவனை நேரடியாக அழைக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.