பாக்யதா லக்ஷ்மீ பாரம்மா
முன்னொரு காலத்தில் வாழ்ந்த மன்னன் பத்ரச்ரவஸ் சிறந்த விஷ்ணுபக்தன். அவனுக்கும் கற்புக்கரசி கரசந்த்ரிகாவுக்கும் பிறந்த மகள் சியாமபாலா. இவள் தான் முதன்முதலில் வரலக்ஷ்மி விரதம் அனுசரித்தவள். சியாமபாலாவுக்கும் சக்ரவர்த்தி மாலாதரனுக்கும் மணமான பின் ஒருநாள் பத்ரச்ரவஸின் அரண்மனைக்கு வயதான சுமங்கலியாக சாட்சாத் மகாலக்ஷ்மியே வந்து உபதேசம் செய்ததை அரசி பொருட்படுத்தவில்லை. யாசகம் கேட்க வந்தவள் என நினைத்து விரட்டினாள்.லக்ஷ்மிதேவியின் கடைக்கண் பார்வையின்றி சியாமபாலாவின் பெற்றோர் பரம ஏழைகளாயினர். சியாமபாலா அனுப்பிவைத்த பொற்காசுகள் கூட தீவினை காரணமாக கரியாக மாறின.மகள் சியாமபாலா ஆற்றுப்படுத்தி வரலக்ஷ்மி மகிமையை லக்ஷ்மிதேவியே உபதேசிக்க அரசி சிரத்தையாகக் கேட்டு பக்தியுடன் வரலக்ஷ்மி நோன்பு கடைபிடித்து மீண்டும் செல்வச் செழிப்பை அடைந்தனர்.
ஸ்ராவண மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்கப்படுவதே வரமகாலக்ஷ்மி விரதம்.
பதினாறு செல்வங்களையும் பெண்களுக்கு சௌபாக்கியத்தையும் வரமாகத் தரும் வரலக்ஷ்மி நோன்பு.
தமிழகம் தவிர ஆந்திரா கர்நாடகா மாநிலத்திலும் பெண்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை.
வியாழன் அன்று மாலையே நல்ல நேரம் பார்த்து ‘வரலக்ஷ்மீ ராவே மா இண்டிக்கி’ என்று அம்மனை வீட்டிற்கு அழைக்கவேண்டும்.
கலசத்தில் வெள்ளியினாலான அம்மன் முகத்தை வைத்து அலங்காரம் செய்து வாசலிலிருந்து ஆரத்தியெடுத்து அழைத்து வருவர்.
பூஜை மண்டபத்தில் வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதில் அம்மனை அமரச்செய்வர்.
சில குடும்பங்களில் அம்மன் முகத்தை சுவற்றில் வரைந்தும் பூஜிப்பதுண்டு.
ஸர்வாலங்கார பூஷிதையாய் லக்ஷ்மிதேவி பூஜையறையில் எழுந்தருளுவாள்.
பொன்னும் மணியும் முத்தும் பவளமும் ஜொலித்தாலும் ‘ காதோலை கருகமணி’ என்ற அணிகலன் அவள் அழகுக்கு அழகு சேர்க்கும் !
வெள்ளியன்று காலை பலவித மலர்கள் குறிப்பாகத் தாமரை ,தாழம்பூ, பிச்சிப்பூ போன்ற மலர்களால் லக்ஷ்மியின் 108 சிறப்பு நாமங்களைக் கூறி அர்ச்சிப்போம்.மங்கலச் சரடுகளையும் அவள் பாதத்தில் வைத்து பூஜிப்போம்.சர்க்கரைப் பொங்கல் , வடை , அப்பம் , பச்சரிசியில் இட்டிலி, சித்ரான்னம் , கொழுக்கட்டை , சுண்டல் , பலவகைப் பழங்களும் படையலிட்டு அம்மன் பாதத்திலிருந்து மங்கலச் சரடுகளை எடுத்து வீட்டிலுள்ள சுமங்கலிப் பெண்களும் ,பெண் குழந்தைகளும் வலது கரத்தில் கட்டிக்கொள்ளவேண்டும்.
அதற்கும் ஸ்லோகம் உண்டு தெரியுமா?
” நவ தந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமந்விதம் ;
பத்நீயாம் தக்ஷிணே ஹஸ்தே
தோரகம் ஹரிவல்லபே .” என்று அம்மனை வேண்டி சரடு அணிவோம்.
மாலை விளக்கேற்றி வழிபட்டு சுற்றுப்புறப் பெண்களுக்கு தாம்பூலம் அளித்து நோன்பை பூர்த்தி செய்வோம்.
கட்டுரை எழுதி தொகுத்தவர்
திருமதி ஸ்ரீ பிரியா ராம்குமார்