தி.மு.க. காங்கிரஸ் செய்த துரோகம்… ஆதாரத்தோடு அடுக்கிய அண்ணாமலை!

தி.மு.க. காங்கிரஸ் செய்த துரோகம்… ஆதாரத்தோடு அடுக்கிய அண்ணாமலை!

Share it if you like it

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் தடையை நீக்கியது பாரதப் பிரதமர் மோடிதான் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இதோ :

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு பா.ஜ.க. மற்றும் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை, உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

ஜூலை 11, 2011 அன்று, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 2014-ஆம் ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு மீதான தடையை உறுதி செய்தபோது, திரு. ஜெயராம் ரமேஷ் அவர்கள் அந்தத் தீர்ப்பை வரவேற்று, “காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது” என்று கூறினார்.

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முன்னாள் பிரதமரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான திரு மன்மோகன் சிங், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களைக் கைவிடுவது நன்று என்று மனிதநேய சங்கம் ஒன்றின் கடிதத்திற்குப் பதிலளித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு. மோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும், அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் மத்திய அரசு உத்தரவுக்குத் தடை விதித்ததும், மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், ஒரு அவசர சட்டத்தை இயற்றுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

2016- ஆம் ஆண்டு மே மாதம், தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று கூறியிருந்தது. தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்று தி.மு.க.வுடன் இணைந்து மக்களை மடைமாற்றி வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் திரு துஷார் மேத்தா அவர்கள், அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில், ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமதி சௌமியா ரெட்டியும் ஒருவர் என்பதையும், திருமதி சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக, கர்நாடக மாநிலத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல் திருமாவளவன் பிரச்சாரம் செய்ததையும் நினைவுபடுத்த விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது நமது மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்கள் மட்டும் தான் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்


Share it if you like it