நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனுக்கும் என்ன தொடர்பு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் கல்லால் குழும நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது. ஆனால், போலி ஆவணங்கள் மூலம் அந்நிறுவனத்தை கல்லால் நிறுவனம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குநர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும், கல்லால் நிறுவனத்துடன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக லைக்கா நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த இருப்புத் தொகையையும் அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த சூழலில், உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் மற்றும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் ஆகியவை ஒரே முகவரியில் இயங்கி வருவதாகவும், மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘‘தி.மு.க. பைல்ஸ் வெளியிட்டபோது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1,000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வி எழுப்பியிருந்தோம்.
ஆனால், முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்றுவரை பதில் வரவில்லை. இதனிடையே, முறைகேடான பணப் பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கி இருக்கிறது. நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கிவந்த அதே முகவரியில்தான், உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் இயங்கி வருகிறது. மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த கேள்விக்காவது பதில் வருமா?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.