மதமாற்ற டார்ச்சர்… மாணவி தற்கொலை! இந்து அமைப்புகள் கொதிப்பு

மதமாற்ற டார்ச்சர்… மாணவி தற்கொலை! இந்து அமைப்புகள் கொதிப்பு

Share it if you like it

மதம் மாறச் சொல்லி துன்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தொடர் போராட்டம் நடத்தப்போவதாக இந்து அமைப்புகள் அறிவித்திருப்பதால் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா. இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் செயல்படும் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் சிறந்து விளங்கும் இம்மாணவி, 10-ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே, லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறும்படியும், அப்படி மாறினால் அவரது மேற்படிப்புச் செலவு முழுவதையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் பள்ளி நிர்வாகத் தரப்பில் ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்கள். எனினும், அவர்களது ஆசைவார்த்தைக்கு மயங்காத லாவண்யா, மதம் மாறுவற்கு மறுத்துவிட்டார். எனவே, லாவண்யாவின் பெற்றோர்களை அழைத்து அதேபோல ஆசைவார்த்தை கூறியிருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆனாலும், லாவண்யாவின் பெற்றோரும் மதம் மாற மறுத்து விட்டார்கள். எனவே, அப்போதிருந்தே அந்த பள்ளி நிர்வாகத்தினர் லாவண்யாவை துன்புறுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நிகழாண்டு 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யாவை, பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு வீட்டுக்கு அனுப்ப மறுத்திருக்கிறது பள்ளி நிர்வாகம். மேலும், பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்வது, விடுதியை சுத்தம் செய்வது, உணவு சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, தோட்ட வேலை செய்வது என வேலைவாங்கி லாவண்யாவை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் மனம் வெறுத்துப் போன மாணவி லாவண்யா, கடந்த 9-ம் தேதி தோட்டத்தில் செடிகளுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனால், வாந்தி எடுத்து மயக்கமடைந்த லாவண்யாவை, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியிருக்கிறார்கள் விடுதி கண்காணிப்பாளர்கள். பின்னர், அவரது பெற்றோரை வரவழைத்த பள்ளி நிர்வாகம், அவர்களிடம் லாவண்யா விஷம் குடித்த விஷயத்தை மறைத்து, சாதாரணமாக உடல்நலமில்லாமல் இருப்பதாகக் கூறி, மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனால், வீட்டிற்கு வந்த பிறகும் வாந்தி நிற்காததால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லாவண்யாவை சேர்த்திருக்கிறார்கள் அவரது பெற்றோர். அப்போதுதான் லாவண்யா விஷம் குடித்த விஷயமே பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. மருத்துவமனையில் லாவண்யா அளித்த வாக்குமூலத்தில், பள்ளி நிர்வாகத்தினர் தனது முன்னிலையிலேயே தனது பெற்றோரிடம் மதம் மாறும்படி வலியுறுத்தியதாகவும், மதம் மாற மறுத்துவிட்டதால் தன்னை ராச்செல் மேரி என்ற கன்னியாஸ்திரி கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார். இதையறிந்த, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர், மதம் மாறச் சொல்லி லாவண்யாவை துன்புறுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் கடந்த 19-ம் தேதி அரியலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். திருவாரூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் உட்பட ஏராளமான விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆனால், அந்தோ பரிதாபம் பூச்சி மருந்து குடித்ததில் லாவண்யாவின் நுரையீரல் 85 சதவிகிதம் அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்ததால், போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். மத மாற்ற வெறியர்களால் ஒரு அப்பாவி இந்து மாணவியின் உயிர் பரிதாபமாக பறிபோயிருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இத்தகவலறிந்த இந்து முன்னணி அமைப்பு, போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கல்வி என்ற பெயரில் மதமாற்றம் செய்யும் இதுபோன்ற மதவெறியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். இதுகுறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். விடுதி மாணவர்களை முழுமையாக விசாரணை செய்தால் மதமாற்றக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வரும். ஆகவே, அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிக்கு நீதிகேட்டு இந்து இளைஞர் முன்னணி (HYF) சார்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார். இதேபோல, பல்வேறு இந்து அமைப்புகளும் மாணவி லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கின்றன. இதனால், தமிழகத்தில் பதட்டம் நிலவுகிறது.


Share it if you like it

One thought on “மதமாற்ற டார்ச்சர்… மாணவி தற்கொலை! இந்து அமைப்புகள் கொதிப்பு

  1. ஒட்டுமொத்தமாக அனைத்து கிறிஸ்தவ மத பள்ளிகளை மூடிவிடவேண்டும் இறைவா எத்தனை அப்பாவி உயிர்கள்தான் இன்னும் பலியாகுமோ அந்த பிளைளையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு யார் தான் உரிய ஆறுதல் நிவாரணம் வழங்க இயலும் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வே இல்லையா? அவரவர்க்கு தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன அதில் இது வேறு கொடுமை

Comments are closed.