அள்ளித் தரும் ஆட்டோமொபைல் பங்குகள்!

அள்ளித் தரும் ஆட்டோமொபைல் பங்குகள்!

Share it if you like it

முதலீட்டாளர்கள் ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்தால் 2 வருடத்தில் கொள்ளை லாபம் பார்க்கலாம்.

இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனித வாழ்வின் ஒரு அங்கமாகவும், தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகவும் ஆட்டோமொபைல் துறை உள்ளது. ஆட்டோமொபைல் துறை எல்லா நாடுகளிலும் தங்களது உள்நாட்டு கட்டமைப்பை மேலும் மேலும் அதிகரித்தது வருகிறது. அதோடு, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தத் துறையை நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தால், இது பல துறைகளின் பக்க பலமாகவும் இருப்பது புலப்படும். கார் என்று பார்த்தால், பல விதமான மாடல்கள் மற்றும் சில லட்சங்கள் முதல் கோடி ரூபாய் வரை உள்ளன. சாதாரண ஆல்டோ முதல் லக்ஷுரி கார்கள் வரை பெட்ரோல் மற்றும் டீசல், தற்போது எலெக்ட்ரிக் கார்கள் என சந்தைப்படுத்தல் அதிகரித்து வருகிறது.

ஆட்டோ என்று பார்த்தால், மக்கள் பயன்படுத்தும் ஆட்டோ, லோடு ஆட்டோ, மினி ஆட்டோ என பல வகைகள் உள்ளன. கனரக வாகன வரிசையில் மினி பஸ், பாசஞ்சர் பஸ், லக்ஷுரி பஸ் மற்றும் லாரிகள், லோடு லாரி என பல தரப்பட்ட வண்டிகள் உள்ளன. விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்கள் மற்றும் அதன் துறை சார்ந்த வாகனங்களும் இதில் அடங்கும். இவை தவிர, இந்த வண்டிகள் தயாரிப்புகளுக்கு தேவைப்படும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல வகைகள் இயங்கி வருகின்றன. மேலும், ஐ.டி. துறை சார்ந்த சிப் தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் உள்ளது.

நம் எல்லோருக்கும் தெரிந்த டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஸ்வராஜ், மஹிந்திரா, ஹீரோ மோட்டார் போன்ற நிறுவனங்கள் நமது லார்ஜ் கேப் சந்தையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. நாமும் தொடர்ந்து இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறோம். ஆனால், சிலர் மட்டுமே உதிரி பாகங்கள் தயாரிக்கும் இன்ஜினீயரிங் பங்குகளை வாங்கி வருகின்றனர். பல பங்குகள் மிட் கேப் துறையின் கீழ் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிறுவனங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இது சார்ந்த பங்குகள் குறைந்தது 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் பல வகையான பிரிவுகள் உள்ளன. உதரணமாக, ஆட்டோ ஆன்சிலரீஸ் – ஏர் கன்டிஷனிங், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. தவிர, பியரிங், பிரேக்ஸ், கிளச்சஸ், இன்ஜினீயரிங் பார்ட்ஸ், இன்ஜின் பார்ட்ஸ், கியர் பாக்ஸ், டீசல் இன்ஜின் பார்ட்ஸ் மற்றும் பெட்ரோல் இன்ஜின் பார்ட்ஸ், ஹெட்லைட், பிஸ்டன், ஷாக் அப்ஸார்பர், வண்டி சக்கரங்கள் மற்றும் டயர்கள், சீட்டிங் கவர்கள் மற்றும் இதன் சார்ந்த பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. மேலும், டிராக்டர் மற்றும் டிரக்குகள் சார்ந்த உபகரணங்கள், பாடி ஒர்க் மற்றும் பஸ் பாடி கட்டமைப்பு கம்பெனிகள் உட்பட இதர பல வகையான தொழிற்சாலைகள் உள்ளன. ஆகவே, முதலீட்டாளர்கள் இதுபோன்ற துணை நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த பங்குகளை கண்டறிந்து சந்தை இறக்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் பலமடங்கு லாபம் பெறலாம்.


Share it if you like it