அய்யா வைகுண்டர் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ம் நாள் திருச்செந்தூர் கடலினுள்ளிருந்து அவதரித்தார். அவர் பதினெட்டு ஆண்டுகள் பூமியில் அவதார திரு இகனையாடல்கள் செய்திருந்தார். அதன் நிறைவில் வைகுண்டருக்கு மேலோகத்தார் சூழ ஆதி வைகுண்டத்தில், கொல்லம் ஆண்டு 1026 வைகாசி 21-ம் நாள் பட்டாபிஷேகம் நிகழ்ந்தது. அந்த பட்டாபிஷேக நிகழ்வினை பக்தர்கள் தேர் திரு நாளாக தற்போது கொண்டாடி வருகின்றனர்.
வைகுண்டர் தாமரையூர் பதியில் முத்தவம் புரியத்துவங்கியது முதல் கலி மன்னன் பிடித்து சிறைபடுத்தி செய்த மரணப் பாடுகளை எல்லாம் தாங்கி கலியை வென்றார். பிறகு சகல மூர்த்தியரும், தேவியரும் தர்ம ஞானக் கொலுவில் சகலருக்கும் அருள்புரிவதற்கு உரிய திரு அருள் ஞான கல்யாண சித்தியை வழங்கினார். அந்த சித்தியாடலைத் தொடர்ந்து ஆலிலை மேல் பள்ளி கொண்டது போன்று, பரப்பிரம்மமாம் வைகுண்டர் ஏக மூல சொரூபியாகவும், அவரின் அநேக சொரூபியராக ஈசர் முதல் சகல மூர்த்தியரும் அவரவர் தேவியரோடு இகபரத்தாருக்கு தரிசனம் வழங்கி இருந்தனர்.
அப்படிப்பட்ட அந்த மகா மங்களக் காட்சி, கயிலை ஈசனின் அரசிருப்புக்கு ஒப்பான வேத அலங்காரத்தோடு விளங்கியது. இவ்வாறு பூமியில் பரப்பிரம்ம கோத்திர ஒரும்பாடு ஏற்படும் போது வைகுண்ட அவதார இகனையாடல்கள் நிறைவுக்கு வரும் என்பது ஆகம விதியாகும். அதை உணர்ந்துக் கொண்ட வைகுண்டர், பூலோகம் விட்டு வைகுண்ட லோகம் சொல்லத் தீர்மானித்தார். அவர் தமது ஏக அநேக சொரூபங்களை பற்றி சேவித்தவாறு இருந்த தேவியர், சீடர்கள், பக்தர்கள் யாரும் அறியாத வண்ணம் வைகுண்டம் ஏக கருதினார். அதன்படி அவர் தமது விருப்பத்தை தமது தந்தையும் குருவுமான விஸ்வ நாராயணருக்கு தெரிவித்தார். பிறகு தமது மேலோக புறப்பாடினை சகலரும் சூட்சகமாக கூறினார்.
“எனதுடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில்
தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே“
– (அகிலம்)
அப்படி தேடியிருக்கும் தருணத்தில் அவர்கள் எந்த சொரூபத்தை நாடி இருக்கிறார்களோ அந்த சொரூபத்தில் அவர் வந்து அவரவர்களுக்கு அருள் புரிவதாகவும், ஐயமேதும் அடையாமல் ‘பேசிய நூலாம்’ அகிலத்திரட்டு அம்மானையில் கூறுவது போல் சகலத்தையும் கண்டு வாழ்ந்தால் அவர்கள் வாடி அலையாமல் தர்மபுவியில் வாழ்திருப்பார்கள் என்றார். இத்தகைய கொலுவில் அவர்களை ஆண்டபடியே வைகுண்டர் என்றும் இருப்பார் என்று கருதினார்களே தவிர, அவரது கூற்றின் சூட்சமத்தை யாரும் அப்போது புரிந்து கொள்ள வில்லை.
ஆனால் வைகுண்டரோ குருவானவர் தனக்கு குறித்து அருளிய காலத்துள் கலி கருகும்படியான யாமங்கள் கூறி, யுகத்தீர்ப்புகள் செய்து தேவ மக்களை கைக்குள் எடுத்து விட்டதால், இப்போது அவர் வைகுண்ட லோகத்துக்கு வர விரும்புவதை அறிந்த விஸ்வ நாராயணர், வைகுண்ட லோகத்தை அலங்காரம் செய்ய தேவரிஷிகளிடம் கூறினார்.
வைகுண்டரை அழைத்து வரும் அணி அலங்கார விபரத்தை கூறி, சற்குருவான சாடாய் முனிவரின் தலைமையில் ஞான சாஸ்திரிகளை புஸ்ப விமானத்தோடு பூமிக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் வைகுண்டரிடம் வந்து ‘அனந்த சுக-மாலின்’ அழைப்பை அறிவித்து பணிந்த போது அவர்களிடம் ‘அரை மணி’ (ஆறுமாதம்) காலம் காத்திருக்க கூறினார். அவ்வாறே புஸ்ப விமானத்தார் நின்றனர். அத்தருணம் முதல் அவர் அநேக சொரூபங்கள் எடுத்து தேவியர் மனைகளுக்கு செல்வது, அமுது ஏற்பது ஆகியவற்றை நிறுத்தி விட்டார்.
பக்தர்கள் வழங்கிய பணிவிடைகளை ஏற்கும் சோபனச் சஞ்சாரங்களையும் நிறுத்தி விட்டார். தமது சொரூபங்களுக்கு தக்கதான ஆடையலங்காரங்களை ஏற்பதை நிறுத்தி விட்டார். மனு நிறமாக இருந்து செய்த சகல அருளாடல் தொடர்புகளும் அடங்கிய, உடல் ஊற்றினை பூலோகத்துக்கே உரியதாக பிரகிருதியின் மூலத்திடம் அற்பணிக்க, செம்மை குருமூலமான உகர பிரணவத்தை பூமி மூல (சிவபூமி) தானத்தில் இறக்கினார்.
அவர் இத்தகைய நிறுத்தல்கள் செய்ததால் பக்தர்கள் சீடர்கள் ஆகியோர் கலக்கமடைந்து, அய்யா வைகுண்டரை உற்று கவனிக்க துவங்கினர். அவ்வாறு தம்மை அணுகி வந்த மக்களின் மனக் கலக்கத்தை புரிந்து கொண்ட வைகுண்டர், அவர்களுக்கு, கால்களை மடக்கி வைகுண்ட லோகத்தை கண்ணோக்கியவாறு தரிசனம் வழங்கினார். பின்னர் அவர் “உடலுக்குள் குறியாக ஒத்து வாழுங்கள், இல்லியல்பாக வாழுங்கள், நான் முழித்து வருவேன்” என்ற உபதேசத்தை மக்களுக்கு அருளி, தொட்டு நாமம் சாற்றி அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு அய்யா, வைகுண்ட லோக புறப்பாடுக்கு ஆயத்தமானார். ஆனால் அங்கு கூடியிருந்த மக்கள் யாரும் இதை அறிந்தார்களில்லை. அரை மணி பொறுப்பதாக ஆறுமாதம் காத்து நின்ற சடாய் முனிவர், ஞான சாஸ்திரியார் சூழ வைகுண்டர் கலை முனி ஞானமுனியோடு ‘புஸ்ப விமானம்’ ஏறி ஆதி வைகுண்ட லோகம் சென்றார்.
வைகுண்ட லோகத்தில் வைகுண்டரின் வருகையை எதிர்பார்த்திருந்த தேவ ரிஷிகள், அவரின் அவதார சிறப்புகளை விவரித்து மெச்சியவாறு இருந்தனர். அப்போது அங்கு வந்த வைகுண்டரை மூவர் தேவியரும் வரவேற்று போற்றினர். ஆதி வைகுண்டத்தில் வந்த அவரோடிருந்த கலை முனி, ஞான முனி இருவரும் மேலோக சங்கம் முன்னிலையில் வைகுண்ட அவதார இகனையாடல் சிறப்புக்களின் சாட்சிகளை ஒப்படைத்தனர். பிறகு வைகுண்டரின் பட்டாபிஷேக சேவைகள் துவங்கியது.
தேவரிஷிகள் வைகுண்டரை ரதம் மீதில் ஏற்றி ஆதி வைகுண்ட லோகத்தை சுற்றிக் காட்டியதோடு, தங்கமான தீர்த்தத்தில் மூழ்க வைத்து ஆடை ஆபரண அலங்காரங்கள் செய்து, தண்டிகையின் மீது அமர வைத்து ஏந்தியவாறு துதி சிங்காசன சபை நடுவே கொண்டு வந்தனர். அப்போது விஸ்வ நாராயணர், இளங்குருமானான வைகுண்ட ராசர் இன்று முதல் ஈரேழு லோகத்தையும் அடக்கியாள, ‘பழங்குரு’ ஆகமப்படி பாரில் தோன்றி பதியாள வந்துவிட்டார் என்று மகாமேருவில் பதித்திட வானவர்களிடம் கூற அவர்களும் அவ்வாறே செய்தனர்.
பிறகு துதி சிங்காசன சபையில் பரப்பிரம்மமாம் பாலன் வைகுண்டருக்கு பொன் நீராள பட்டு துகிலால் அலங்காரம் செய்து, மகாபெரிய கிரீடத்தை அவர் சிரசில் சூட்டி, பகுத்தான செங்கோலோடு பரம்பெரிய சகல முத்திரிகளும் வழங்கி, சகல தேவ வாத்தியங்களும் முழங்கி சேவித்து அவரை துதி சிங்காசனத்தில் தூக்கி அமர்த்தினார்கள். பிறகு வைகுண்டருக்கு ஈசர் சகல வரங்களும் வழங்கி சிறப்பித்தார். இவ்வாறு ஆதி வைகுண்டத்தில் அருளாட்சிக்கு அமர்ந்த அவர், பூமியில் தமக்கு தர்மச் சேவைகள் செய்த மக்களை குறித்து தந்தை விஸ்வ நாராயணரோடு பேசினார். தமக்கு இதுநாள் வரையும் பலவித சேவைகள் செய்த மக்களை தமது திருப்பதத்தை வணங்க செய்திடுமாறு வைகுண்டர் கூறியது கேட்டு மகிழ்ந்த விஸ்வ நாராயணர், அவ்வாறே செய்வதாக உறுதிகூறி அன்று வரை வைகுண்ட அவதார சேவையில் பங்காற்றிய பக்தர்கள் அடையும் மேல்பலன்களையும் விவரித்தார்.
இங்கே பூலோகத்தில் தாமரையூர் பதியில் காலை விடியும் நேரத்தில் கூடிய பக்தர்களும், தேவியரும், சீடர்களும் வைகுண்டரின் மனு சொரூபம் முதல் சகல மூர்த்தி சொரூபங்களையும் காணாமல் தேடி வாடி நின்றனர்.
பிறகு, வைகுண்டர் முன்பு கூறிய விபரப்படியே வைகுண்டம் சென்றுள்ளார் என்று புரிந்து கொண்டனர். தேவியர் முதல் சீடர்கள், பக்தர்கள் எல்லாம் முன்பு எத்தகைய சொரூபத்தில் வைகுண்டரை கண்டு மனதில் பதித்துக் கொண்டார்களோ அந்த சொரூபத்தை நாடியவாறு வணங்கும் தவங்கள் செய்திருந்தனர். அந்த முறைகளை தழுவியே பக்தர்கள் எந்த மூர்த்தி சொரூபத்தை மனதில் பதித்து தியானிக்கின்றார்களோ அந்த சொரூபத்தில் அவருக்கு தரிசனம் வழங்கி பலன் அளிக்கும் தோணாத்துறை அரணான தோணாப்பொருளாக வைகுண்டர் அருளாட்சி செய்கிறார்.
ஸ்ரீ குமார்
ஒருங்கிணைப்பாளர், அகிலத்திரட்டு வேத ஆராய்ச்சி மையம்