இந்தியாவில் இருக்கும் காதலனை கரம்பிடிப்பதற்காக, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடலில் நீந்தி கடந்து வந்திருக்கிறார் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
காதலுக்கு கண் இல்லை என்பார்களே, அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்தியாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்தக் காலத்தில் காதல் என்பது கண்ணும் கண்ணும் சந்திப்பதால் ஏற்பட்டு வந்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், இந்த நவீன காலகட்டத்தில், காதல் என்பது பெரும்பாலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே ஏற்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், காதல் கோட்டை சினிமா போல ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திக்காமலேயே காதல் வயப்படுவதுதான். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், கடல் கடந்தும் காதலிப்பதுதான்.
திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த இந்த கடல் கடந்த காதல் தற்போது நிஜ வாழ்க்கையிலும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், சமூக வலைத்தளக் காதலில் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள், இந்திய வாலிபர்களை திருமணம் செய்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இது தொடர்பான செய்திகள், காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண், சமூக வலைத்தளம் மூலம் இந்தியா வாலிபரை காதலித்து நீந்தியே ஆற்றைக் கடந்து வந்து காதலனை திருமணம் செய்துக்கொண்டிருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மண்டல். இவர், சமூக வலைத்தளம் மூலம் இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த அபிக் மண்டல் என்ற வாலிபரை காதலித்திருக்கிறார். சமூக வலைத்தளம் மூலம் மட்டுமே பேசிவந்த இருவருக்கும் நேரில் சந்திக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால், கிருஷ்ணா மண்டலிடமும் பாஸ்போர்ட் இல்லை, அபிக் மண்டலிடமும். மேலும், இருவருமே ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், இருவருமே நாடு விட்டு நாடு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில்தான், காதலனை சந்திக்க துணிச்சலாக ஒரு முடிவை எடுத்தார் கிருஷ்ணா மண்டல். ஆம், வங்கதேசத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு பெரிய கடல் இருக்கிறது. இந்த கடலை படகு மூலம் கடந்து வந்தால் ரோந்து போலீஸாரிடம் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதனால், வங்கதேச சிறையில் அடைக்கப்படும் சூழல் ஏற்படலாம். ஆகவே, கடலை நீந்தியே கடக்க முடிவு செய்த கிருஷ்ணா மண்டல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர்பெற்ற சுந்தரவனக்காட்டிற்குள் சென்றார். பின்னர், அங்கிருந்து கடலில் நீந்தத் தொடங்கினார். சுமார் ஒரு மணிநேரம் கடந்த நிலையில் இந்திய எல்லையை வந்தடைந்தார்.
பின்னர், தனது ஆசைக் காதலனை சென்று சந்தித்தார். இதன் பிறகு, இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கொல்கத்தாவிலுள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். எனினும், கிருஷ்ணா மண்டல் இந்தியா வந்த விஷயம் எப்படியோ லோக்கல் போலீஸாருக்குத் தெரிந்து விட்டது. இதையடுத்து, சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த காரணத்திற்காக கிருஷ்ணா மண்டலை போலீஸார் கைது செய்தனர். இவர், வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.