கனல் கண்ணனுக்கு ஆதரவாக ஹிந்து அமைப்புகள்!

கனல் கண்ணனுக்கு ஆதரவாக ஹிந்து அமைப்புகள்!

Share it if you like it

கனல் கண்ணனை போலீஸார் கைது செய்ய தீவிரம் காட்டி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக ஹிந்து அமைப்புகள் களத்தில் குதித்திருக்கின்றன.

ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில், ஹிந்து உரிமைகள் மீட்பு மாநாட்டுக் கூட்டங்கள் கடந்த ஒரு மாதகாலமாக நடந்து வந்தன. இதன் இறுதி கூட்டம் சென்னை மதுரவாயலில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளொன்றுக்கு 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். ஆனால், கோயிலுக்கு முன்பு கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலையை உடைக்கும் நாள் என்னாளோ அந்நாள்தான் ஹிந்துக்களின் எழுச்சி நாளாகும்” என்று கூறினார். இவ்வாறு அவர் பேசும்போது சில முறை மைக்கை ஆஃப் செய்த சம்பவங்களும் அரங்கேறியது. ஆனாலும், விடாத கனல் கண்ணன், மீண்டும் மைக்கை ஆன் செய்யச் சொல்லி, அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

கனல் கண்ணனின் இந்தப் பேச்சு, பெரியாரிஸ்ட்களையும், திராவிடர் கழகத்தினரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. மேலும், திராவிடர் கழகம் தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறது. எனவே, கனல் கண்ணனை கைது செய்யும்படி ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதோடு, திராவிடர் கழகம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், தமிழ் சினிமாவில் திராவிட இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்த நிலை மாறி, தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, கனல் கண்ணனை கைது செய்து நெருக்கடி கொடுப்பதின் மூலம், திரையுலகில் இனி யாரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

இதையடுத்து, ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக கனல் கண்ணனை கைது செய்வதற்காக, போலீஸார் நேற்று இரவு முழுவதும் மப்டியில் அவரது வீட்டை சுற்றிச் சுற்றி வந்தனர். ஆனால், கனல் கண்ணன் வீட்டில் இல்லை. இதனால் கைது செய்ய முடியவில்லை. ஆகவே, இன்று காலையும் அவரது வீட்டைச் சுற்றி போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இந்த சூழலில்தான், கனல் கண்ணனுக்கு ஆதரவாக ஹிந்து அமைப்புகள் களமிறங்கி இருக்கின்றன. ஹிந்து முன்னணி, பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் கனல் கண்ணனுக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கின்றன. ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கனல் கண்ணன் வீட்டு முன்பாக குவிந்திருக்கிறார்கள்.


Share it if you like it