மரக்கடைக்கு வனத்துறை அதிகாரிகள் சீலை வைத்த நிலையில், அதை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை திருடி விற்பனை செய்த தி.மு.க. பிரமுகரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டைச் சேர்ந்தவர் கண்ணன். தி.மு.க. பிரமுகரான இவர் கே.கே.ஜி. என்கிற பெயரில் மரக்கடை ஒன்றை திறந்தார். இந்த மரக்கடையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்தாண்டு ஜூன் மாதம் திறந்து வைத்தார். இக்கடைக்கு வனத்துறை அனுமதி இல்லாததால், மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனினும், ஆளும்கட்சி பிரமுகர் என்கிற தைரியத்தில், வனத்துறை அனுமதி இல்லாமலேயே மரங்களை விற்பனை செய்து வந்தார் கண்ணன். எனவே, வனத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மரக்கடைக்கு சீல் வைத்தனர்.
ஆனால், இதற்கெல்லாம் கண்ணன் துளியும் அசரவில்லை. வனத்துறையினர் வைத்த சீலை உடைத்து, கடையிலிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்களை திருடி விற்பனை செய்து வந்தார். இதையறிந்து, வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கச் சென்றிருக்கிறார். அப்போது, அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார் கண்ணன். இதுகுறித்து வனச்சரக அலுவலர் நடுவீரப்பட்டு போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில், கண்ணன் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தன். இதையறிந்த கண்ணன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.