பெண்ணடிமையாக உருவகப்படுத்தப்படும் பெண்களின் கண்ணியமான உடையியல். அறியாமையில் சீரழியும் சமூகம்

பெண்ணடிமையாக உருவகப்படுத்தப்படும் பெண்களின் கண்ணியமான உடையியல். அறியாமையில் சீரழியும் சமூகம்

Share it if you like it

ஆள் பாதி – ஆடை பாதி என்பது நம் முன்னோரின் பொன்மொழி. அதன் அர்த்தம் ஆள் பாதி ஆடை அணிந்தால் போதும் என்பதல்ல. ஒரு தனி மனிதனைப் பற்றிய மதிப்பீடும் கண்ணியமும் அவர் அணிந்திருக்கும் ஆடை அது உணர்த்தும் கருத்தியல் அடிப்படையிலேயே மதிப்பிடப்படும் என்ற பொருளில் தான். அந்த வகையில் மனிதன் உடுத்தும் ஆடை அவனது புறத்தோற்றத்தின் தன்மான கவசமானாலும் அகத்தோற்றத்தின் வெளிப்பாடாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பெண்களின் ஆடையியலும் அது சார்ந்த அவர்களின் கருத்தியலும் தனிமனித ஒழுக்கம் தொடங்கி சமூக ஒழுக்கம் – கட்டுக்கோப்பு வரையிலும் அனைத்து விஷயங்களையும் பிரதிபலிக்க கூடியது. அந்த வகையில் பெண்களின் ஆடை ஆடையியல் சார்ந்த கருத்தியல் பெரும் கவனத்தை ஈர்க்கிறது.

அதனால் தான் பெரும் தாக்கமும் பிரதிபலிப்பும் ஏற்படுத்தக்கூடிய பெண்களின் ஆடைகளும் அவர்களின் ஆடையியலும் அவர்களையும் பாதுகாத்து அதன் மூலம் சமூகத்தில் தனி மனித ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கும் வழியில் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆடை கட்டுப்பாடுகளை அதன் அவசியத்தை உணர்ந்து பண்பாடு வகையில் முன்னெடுத்த வரையில் இங்கு அசம்பாவிதங்கள் அரிதாகவே இருந்தது. ஆனால் மேல்நாட்டு மோகமும் அதன் சார்பில் வந்த கலாச்சார சீரழிவுகளும் முற்போக்கு பகுத்தறிவு என்ற பெயரில் ஆபாசமும் அநாகரீகமும் திட்டமிட்டு திணிக்கப்பட்டதும் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் இந்த கலாச்சார சீரழிவுகள் எல்லாம் உரம் போட்டு வளர்க்கப்பட்டது ஒட்டுமொத்தமாக சமூக சீரழிவில் போய் நிற்கிறது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சீரழிவதும் அவர்களின் உடைகள் உடை சார்ந்த கருத்தியல் எல்லாம் இன்று பெரும் தனிமனித ஒழுங்கின் அச்சுறுத்தலாக மாறி நிற்பதும் அபாயத்தின் அறிவிப்பு.

என் உடல் – என் உரிமை என்று தான்தோன்றித்தனமாக ஆபாசமாக ஆடை அணிவது ஒரு பெண்ணின் தனிமனித சுதந்திரம் என்றால் அவளுக்கு அதற்கு முழு உரிமை உண்டு என்றால் அதனால் ஏற்படும் உணர்வு ரீதியான பாதிப்புகளாலும் உளவியல் மாற்றங்களாலும் ஒழுங்கீனத்தை நோக்கி நகர்த்தப்படும் ஒரு ஆணின் தனிமனித பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு.? என் உடல் – என் உரிமை என் உணர்வுகளுக்கு நான் உந்து சக்தி அளிக்கிறேன் என்று ஒரு ஆண் தனி மனித சுதந்திரம் கட்டமைக்கும் போது அது ஒரு பெண்ணின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும்போது அது பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு எதிரான பெரும் குற்றம் என்று குறிப்பிடும் சட்டம் அதற்குக் காரணமான உடை மற்றும் உடல் மொழிகளை தனிமனித சுதந்திரம் என்று அனுமதிப்பது எவ்வளவு பெரிய சமூக கேடு. ?

மேல்நாட்டில் ஆடை அணிவதைப் போல நானும் அணிந்து கொண்டு போவேன். அது என் விருப்பம். என்று சொல்லும் பெண்கள் மேல்நாடுகளில் பெண்கள் சர்வ சாதாரணமாக கடந்து போகும் பாதிப்புகளை அவர்களின் மனநிலையில் இருந்து சாதாரண பாதிப்புகளாக கடந்து போக முடியுமா?. முடியாது. அது எனக்கு பேரிழப்பு. அதை நான் ஏற்க மாட்டேன். அதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றால் இவர்களின் மனநிலைக்கு ஒவ்வாத விஷயங்களைக் கொண்டு வரும் உடலியலை இவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்.?

திரைப்படங்களில் இருப்பது போல் ஆடை அணிவதை முற்போக்கு வாதம் – நவநாகரீகம் என்று எடுத்துக் கொள்ளுவோமானால் அதே திரைப்படங்களில் பெண்களுக்கு நிகழும் அநீதிகளும் அபாயங்களும் நமக்கும் வரக்கூடும் என்ற புரிதல் ஏன் இருப்பதில்லை? . அப்படிப்பட்ட அபாயங்களும் அநீதிகளும் வரும்போது திரைப்படத்தில் கிராபிக்ஸில் வருவது போல் எங்கோ ஒரு மாவீரன் பாய்ந்தோடி வந்து அந்தப் பெண்ணை பாதுகாக்க முடியும். ஆனால் எதார்த்த உலகில் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தும் பெண்கள் திரைப்பட மோகத்தில் ஆடை கலாச்சாரத்தை பின்பற்றுவது எவ்வளவு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல். ?

இதை கண்டிக்க வேண்டிய பெற்றோர்கள் செல்லம் கொடுக்கிறேன் என்ற பெயரில் இதையெல்லாம் நாகரீகம் என்று ஊக்குவிப்பதும் இதை கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டிய சமூகம் இதை பெண்ணியம் என்ற பெயரில் உரம் போட்டு வளர்ப்பது இதை கட்டுப்படுத்த வேண்டிய சட்டமும் முற்போக்கு வாதம் என்ற பெயரில் உயர்த்திப் பிடிப்பதும் எப்படிப்பட்ட சமூக அபாயங்கள்?.

பாவாடை தாவணி அணிந்த காலத்தில் வராத பாலியல் தொந்தரவுகள் நவநாகரிக ஆடைகளை அணியும் போது அதிகரிக்கும் என்றால் நாம் அனைவரும் பாவாடை தாவணிக்கு உடனடியாக மாற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. கட்டாயமாக மாற முடியாது அதை ஒப்புக் கொள்வோம் . ஆனால் நாம் அணியும் எந்த உடையும் கண்ணியத்தையும் கௌரவம் காக்கும் வகையில் அணிவதை எல்லோரும் எப்போதும் கடைப்பிடிக்க முடியும் தானே? நாம் ஏன் அதை செய்ய தயங்க வேண்டும்?.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியலில் மாற்றம் இருக்கலாம். ஆனால் உணர்வுகள் ஒன்றுதான். பாலியல் ரீதியான பாதிப்புகள் வெளிப்பாடுகளில் மாற்றம் இருக்கலாம். ஆனால் தன்மானம் ,சுய கௌரவம் ,கற்பும் – ஒழுக்கமும் ஆண் – பெண் இருவருக்கும் பொது தானே? . இதை உணர்ந்து ஆண் – பெண் இருவரும் உடை உடுத்தி சமூகத்தின் தனி மனித ஒழுங்கையும் ஆண் – பெண் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் ஆபாச ஆடையும் ஆடை மொழியும் ஒரு காரணம் என்று குறிப்பிடுபவர்களை பிற்போக்கு வாதிகள் பெண்ணியத்திற்கு எதிரானவர்கள் என்று வன்மத்தோடு அணுகும் தங்களை முற்போக்கு வாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் யாரும் பாதிக்கப்படும் பெண்களின் இழப்புகளையோ அவர்கள் குடும்பத்தின் மன வலியையோ உணர்ந்தவர்கள் இல்லை. அதே நேரத்தில் ஏதோ ஒரு உந்துதல் தவறாக வழிநடத்தப்பட்டு குற்றவாளியாக நிற்கும் ஒரு ஆணின் துரதிஷ்டத்தையோ அவன் காரணமாக அவன் குடும்பமும் ஆண் சமூகமும் எதிர்கொள்ளும் அவமதிப்பையும் உணர்ந்தவர்கள் இல்லை.

மாறாக முற்போக்கு – பகுத்தறிவு – தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் கண்முன்னே நடக்கும் சீரழிவுகளை எல்லாம் உயர்த்திப் பிடிப்பதும் இந்த சீரழிவுகளுக்கு காரணமான விஷயங்களை முன் வைத்து பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கும் அவர்களின் மீதான ஆண்களின் வக்கிரமான பார்வை அணுகுமுறைக்கும் பெண்களின் ஆடை இயலும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டு தவறுகளை சரி செய்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்பவர்களை பிற்போக்கு வாதிகள் என்று முத்திரை குற்றி அவர்களை சமூகத்தின் கருத்தியல் பாதையிலிருந்து அப்புறப்படுத்துவதுமே அவர்களின் ஒரே இலக்கு.

பெண்களே ! சமூகத்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் ஆண்களின் பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கும் நீங்கள் அணியும் ஆடை மட்டும் காரணம் என்று யாரும் சொல்வதில்லை. ஆண்களின் தனிமனித வக்கிரம் ஒழுங்கினம் கலாச்சார சீரழிவு ஆணாதிக்கம் மனோபாவம் தன்னுடைய தேவைக்கு எதையும் செய்யலாம் என்ற வன்மத்தின் வெளிப்பாடுகள் தான் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் காரணங்கள். அந்த வகையில் அவன் குற்றவாளியே. அவனின் கருத்தியல் செய்கைகள் யாவும் தண்டனைக்குரியதே அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

ஆனால் துன்புறுத்தியவனை தண்டிப்பதாலும் அவனைக் கொன்று குவிப்பதாலும் கூட பாதிக்கப்பட்ட பெண்களின் இழப்புகளும் மன வலிகளும் அவர்களின் குடும்பம் சமூகத்தில் எதிர்கொள்ளும் சங்கடங்களும் தீருவதில்லை. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் துரத்தி வரும் மன வலியாக இருப்பதனால் மட்டுமே பெண்களின் பாதுகாப்பை தற்காப்பை முதன்மையாக வலியுறுத்துகிறார்கள். அதன் காரணமாக மட்டுமே உங்களின் நலம் கருதி உங்களின் பாதுகாப்பு கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மட்டுமே பெண்களின் உடல் பொக்கிஷமாக அதை பாதுகாக்கும் ஆடைகள் தனிமனித ஒழுங்கும் கலாச்சாரம் பேணும் தன்மான கவசமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்கள்.

பெண்களின் கௌரவம் – கண்ணியம் காக்கும் இந்த கண்ணியமான ஆடையியல் என்னும் அறிவுரை உங்களை உயர்வாக மதிக்கும் எண்ணத்தின் வெளிப்பாடே . குடும்பங்களின் பொக்கிஷமாக தேசத்தின் பெரும் செல்வமாக இருக்கும் பெண்கள் அவர்களின் மகத்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த கண்ணியமான ஆடையியல் என்ற அறிவுரையே தவிர அதை ஆணாதிக்கமோ பிற்போக்கு வாதமோ பெண்களை அடிமைப்படுத்தும் கருத்தியலோ இல்லை என்பதை உணருங்கள். பாரதத்தின் அறிவார்ந்த பெண்களாக நீங்கள் உங்கள் அழகியலை பாதுகாத்திடுங்கள். தவறில்லை. ஆனால் அழகாயுதம் தவிர்த்து அறிவாயுதம் ஏந்தி தன்னம்பிக்கையோடு வாழ்வில் அனைத்தையும் எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் வீரமங்கைகளாக வலம் வரும் வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Share it if you like it