அமைச்சருக்கு சிறையில் மசாஜ்: வைரலாகும் வீடியோ!

அமைச்சருக்கு சிறையில் மசாஜ்: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சருக்கு சிறையில் ஆயில் மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இவர், உள்துறை, மின்சாரம், பொதுப்பணித் துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் கூடுதலாக கவனித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் 1.62 கோடி ரூபாய் வரை பணமோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதனடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது.

இதையடுத்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயின் உள்பட 3 பேரை கடந்த மே மாதம் 30-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் சத்யேந்திர ஜெயின் வீடு மற்றும் அலுவலகம், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, ரூ.2.82 கோடி, 133 தங்கக்காசுகள் உட்பட 1.80 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.  தற்போது, சத்யேந்திர ஜெயின் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவரை சிறை அறைக்குச் சென்று பார்க்க அவரது மனைவி பூனம் ஜெயினுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் வி.வி.ஐ.பி. வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. அதாவது, அவரது மனைவி அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் வரை சிறை அறையில் இருப்பதாகவும், ப்ரூட் சாலட் உள்ளிட்ட வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகள் அவருக்கு கொடுக்கப்படுவதாகவும், குறிப்பாக சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு ஆயில் மசாஜ் செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. மேலும், சக சிறைவாசியான அன்குஷ் ஜெயின் என்பவரது மேற்பார்வையில் சத்யேந்திர ஜெயினின் சிறை அறை சுத்தம் செய்யப்படுவதாகவும், அவரது தலையணை, மெத்தை விரிப்புகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி தலைமைச் செயலாளரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், டெல்லி திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறை அறையில் ஆயில் மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 6 நிமிடம் 5 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ, செப்டம்பர் 13-ம் தேதி இரவு 11:11 மணியளவில் காட்சியாகி இருக்கிறது. சி.சி.டி.வி.யின் இடது பக்கத்தில் செல் எண் 1A பிளாக் தெரிகிறது. சத்யேந்திர ஜெயின் இந்த பிளாக்கில்தான் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சி.சி.டி.வி. காட்சியில், ஜெயின் படுக்கையில் ஓய்வெடுப்பதைக் காணலாம். அவரது கையில் சில காகிதங்களை வைத்திருக்கிறார். அதேசமயம், மசாஜ் செய்பவர் அமைச்சரின் கால்களை அழுத்தி விடுகிறார். மேலும், காலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்கிறார். இன்னொரு வீடியோ காட்சியில் சத்யேந்திர ஜெயின் குப்புற படுத்திருக்க, கால் முதல் தோல்பட்டை வரை மசாஜ் செய்கிறார். மற்றொரு காட்சியில், தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்கிறார். அடுத்த காட்சியில், அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சிறை அறையில் சிலருடன் ஹாயாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போதும், அந்த நபர் அமைச்சருக்கு மசாஜ் செய்து கொண்டிருக்கிறார். ஆக, அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது உண்மை என்பதை இந்த வீடியோ நிரூபிக்கும் வகையில் இருக்கிறது.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே, சிறையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாக, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், திகார் சிறையில் இருந்தவாறே தனது வழக்கறிஞர் மூலம் கடந்த மாதம் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவிற்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது, சிறையில் அமைச்சருக்கு ஆயில் மசாஜ் செய்யப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it