” கிராம தன்னாட்சி “

” கிராம தன்னாட்சி “

Share it if you like it

நேற்றய தினம் வடகிழக்கு பருவ மழை இன்னும் சென்னையில் தொடங்காத போதும் “ஹோ”என்று சத்தத்தோடு செப்டம்பர் மாத மேலடுக்கு சுழற்சி மழை பெய்து கொண்டிருந்தது.

7 மணி அளவில் வாசலில் அந்த மழையை பொருட்படுத்தாது ஒரு இளைஞர் கையில் குடையோடு நின்று கொண்டு இருக்க நான் அருகே சென்று என்னவென்று கேட்க அவர் ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு சென்றார்.

தெரு விளக்கு வெளிச்சத்தில் ” Village Swaraj ” என மங்கலாக புத்தகத்தின் பெயர் தெரிந்தது . மேலே என் அறைக்கு சென்று வெளிச்சத்தில் பார்த்த போது ஆசிரியர் பெயர் எம்.கே .காந்தி என இருந்தது. சிறிது அசிரத்தையாக , மேலோட்டமாக பொருளடக்கம் மற்றும் முற்றும் முன்னுரையை படிக்க, சிறியதாக தொடங்கிய ஆர்வம் திடீரென்று விஸ்வரூபாம்பாக மாற முதல் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தேன்.

பெரிய கடலை சிறு பாத்திரத்துக்குள் அடைப்பது எப்படி இயலாத காரியமோ , அது போலத்தான் இந்த புத்தகத்துக்கு விரிவுரை எழுதுவது என்பது. ஆகவே முதல் ஓரிரண்டு அத்தியாயத்தை பற்றி மட்டும் எழுதுவது என முடிவு செய்தேன்.

Village Swaraj : “கிராம தன்னாட்சி “அதாவது கிராமங்கள் சுயமாக நகரங்களை சாராமல் இருத்தலே கிராமத் தன்னாட்சி .
காந்திஅடிகள் இதைத்தான் இந்த புத்தகத்தில் விரிவாக எழுதி இருக்கிறார்.

சமீப காலத்தில் புவி வெப்பமயமாதல் , விவசாயி நலன்கள், விவசாயத்தின் முக்கியத்துவம், கிராமங்களின் முக்கியத்துவம் இவைகளை பற்றி தமிழ் சினிமாவும் இன்ன பிற ஊடகங்களும் கையில் எடுத்துள்ளன.
கத்தி, பூமி, கனா மற்றும் கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் இதற்கு சான்றுகள்.

2000ஆம் ஆண்டு முதல் ராம்தேவா மற்றும் அவனிஷ்குமார் போன்ற எழுத்தாளர்கள் இந்தியகிராமங்கள் நம் பொருளாதாரத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது , கிராமங்கள் நம் நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தி புத்தகங்கள் எழுதினார்கள்.

காந்தியடிகள் ஒரு தீர்கதரிசி இவற்றை எல்லாம் அவர் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே தனது
‘எங் இந்தியா’ பத்திரிகையில் எழுதி விட்டார். அவைகளின் தொகுப்பு தான் இந்த Village Swaraj என்கின்ற புத்தகம்.

சரி இனி அவர் இந்த புத்தகத்தில் பல ஆண்டடுகளுக்கு முன் சொன்னவை எப்படி இன்றும் பொருந்துகிறது என்று பார்ப்போம்.

ஸ்வராஜ் என்றால் என்ன ? ஸ்வராஜ் என்பது ஒரு வேத பெயர். ‘சுய ஆட்சி ‘, ‘சுய கட்டுப்பாடு’.
உண்மையான ஸ்வராஜ் என்பது, சிலர் மட்டுமே அதிகாரத்தை அடைவது அல்ல. சிலர் மட்டுமே அடைந்த அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்யும் போது , எதிர்த்து யாவரும் குரல் கொடுப்பதே. இந்தியாவில் இதற்கு குறையே இல்லை . மக்கள் யாவரும் தங்கள் குரலை வாக்குச்சாவடியில் காண்பிக்கிறார்கள்.

நாம் இங்கிலாந்தில் உள்ள மாதிரியோ, அமெரிக்காவில் உள்ளது போன்றோ , பிரபுக்கள் சபை மற்றும் ஹவுஸ் ஆப் காமன்ஸ் போன்றோ கட்டமைப்பு செய்யாமல் கிராம நிர்வாகத்தை மையமாக வைத்து ராமராஜ்ய பாணியில் நம் நாட்டை கட்டமைக்க வேண்டும்.

தொழில் புரட்சி என்பது கிராம நலன் சார்ததாக இருக்கவேண்டும். தொழில் மயமாதல் உலக சந்தையை பொறுத்து உள்ளது. உலக சந்தையில் நம் தொழில் புரட்சியால் செய்த பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டால் , தேக்க நிலை ஏற்பட்டு நம் நாட்டு பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும். தொழில் புரட்சி என்பது ஒரு சாபக்கேடு .

இதையே கிராமச்சந்தை பொருளாதாரத்தை மய்யமாக வைத்து நம் உள்ளூர் சந்தையிலேயே விலை போகுமாறு வடிவமைத்தால் என்றும் தேக்க நிலை ஏற்படாது. மேற்சொன்ன இவை யாவும் தற்போது, கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டும் , கிராம நிர்வாகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டும் இந்தியா முழுவதும் கிராமங்களை முன்னிறுத்தியே நிர்வாகம் செயல் படுகிறது . மேலும் ‘ஆத்ம நிற்பர்’ என்னும் திட்டத்தின் படியே உள்ளூர் சந்தை சார்ந்து இருக்குமாறு நம் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. மகாத்மாகாந்தியின் கனவு நினைவாகிவிட்டது என்றே சொல்லலாம்.

காந்தியின் தொழில்மயமாதல் கூடாது என்பது தவறு என்பது என் கருத்து. ஒரு இடத்தில் காந்தியே கூறியிருப்பது ” நான் பல எண்ணங்களை கூறி , அவற்றை சில காலங்களுக்குப்பிறகு அவற்றை நான் சரியில்லை என கூறியிருக்கிறேன் . அதன் காரணம் உண்மையை தேடி அலையும் போது இப்படி ஆவது இயற்கை தான்”. காந்தி இப்போது இருந்திருதந்தால் , காலத்தின் கட்டாயத்தை அனுசரித்து கண்டிப்பாக இந்த தொழில் புரட்சியை ஆதரித்து இருப்பார்.

அவர் கூறிய அடுத்த கனவு : ஒரு ஆதர்ச அல்லது ஒரு முழுமை பெற்ற கிராமம் எப்படி இருக்க வேண்டும் ?

அங்கு வீடுகள் சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருள்களை வைத்து கட்டப்படல் வேண்டும். முற்றம் இருக்க வேண்டும், அதில் காய்கறி செடிகள் வளர்க்கப்பட வேண்டும் . ஆடு, மாடுகள் இருக்க வேண்டும் . தெருக்கள் சுத்தமாக இருக்க வேண்டும். பொது கிணறு இருக்க வேண்டும் , அதில் சாதி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் பயன் படுத்த வேண்டும் . கூட்டுறவு முறையில் பால் உற்பத்தி செய்யப்படவேண்டும் . கண்டிப்பாக பள்ளி கூடம் இருக்க வேண்டும். பஞ்சாயத்து கிராமத்தில் நடக்கும் சர்ச்சைகளை தீர்த்து வைக்கவேண்டும் . கிராமங்கள் தன்னிறைவு பெற்றதாக இருக்க வேண்டும் . அதாவது தனக்கு உண்டான காய்கறி , அரிசி, பருப்பு வகைகள் , பழங்கள் இவற்றை தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். பணப்பயிர்களான வேர்க்கடலை போன்ற பயிர்களையும் பயிர் செய்யலாம். உற்பத்தி செய்வதில் தேவைக்கு அதிகமாக இருப்பதை நகரங்களுக்கு விற்பனை செய்யலாம். இப்படி செய்வதால் கிராமங்கள் பொருளாதாரத்தில் நன்கு உயர முடியும். இதனால் கிராமத்தில் பஞ்சம் , பட்டினி என்பது இருக்காது.

காந்தியடிகள் சொல்லிய பல இன்று பின்பற்றப்படுகின்றன. சந்தை படுத்துவதில் இடை த்தரகர்களால் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவைகளை தற்போது இருக்கும் அரசாங்கம் தீர்த்துவைக்க பெரு முயற்சி செய்கிறது.

அரசாங்கத்தின் பங்கு என்ன ?

கிராமங்கள் முறைப்படி கணக்கெடுப்பு செய்யப்பட்டு , அங்கு சிறு உதவியினாலோ அல்லது உதவி இல்லாமலோ உற்பத்தி செய்ய கூடிய செக்கு எண்ணை, தேன், கைக்குத்தல் அரிசி, விளையாட்டுச் சாமான்கள், பாய்கள், கையால் செய்யப்பட்ட காகிதம், சோப்பு போன்ற பொருள்களை பட்டியலிட்டு , கிராமவாசிகள் பயன் படுத்தியது போக, பாக்கி உள்ள பொருள்களை எவ்வாறு சந்தை படுத்துவது என தீர்மானித்து, அப்படி சந்தை படுத்தப்பட்ட பொருள்களின் வருவாயிலிருந்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி உயர்த்துவது என்பது போன்ற வேலைகளை அரசாங்கம் செய்ய வேண்டும்.

இப்போது செயல் படும் மகளிர் சுய உதவி குழுக்கள் அரசாங்கத்தின் உதவியோடு மேற்சொன்ன அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது என்பது காந்திஜியின் தீர்க்கதரிசனம் வியக்கத்தக்கதாக உள்ளது. இந்தியாவின் உள்ளூர் சந்தை பொருளாதாரம் வலுவாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டின் படையெடுப்பு என்றும் எடுபடாது .

என்னே ஒரு தொலை நோக்கு பார்வை காந்திஜிக்கு. இப்போது இருக்கும் அரசாங்கம், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் விதமாக எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் பெரிய அளவில் உலக அரங்கில் இந்தியாவை பல மடங்கு உயர்த்தியதோடு அல்லாமல் இந்தியபொருளாதாரத்திலும் உற்பத்தித்திறனிலும் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது இவை காந்திஜியின் தொலைநோக்கு பார்வையை உறுதி செய்யும் விதமாக உள்ளது. 29 -வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘இந்தியா மற்றும் உலகம்’ எனும் தலைப்பில் உள்ளவை அனைத்தும் இப்போது சரியாக பொருந்துகிறது

பூர்ண ஸ்வராஜ்யம் பற்றி என்னுடைய கருத்து :

பூர்ண ஸ்வராஜ்யம் என்பது தனிப்பட்ட சுதந்திரம் கிடையாது. ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான சுதந்திரம். என்னுடைய தேசியம் என்பது தீவிரமானது என்றாலும் அது பிரத்யேகமானது அல்ல . அவை எந்த ஒரு தேசத்தையும் சேதப்படுத்தாது. இந்தியா எல்லோரோடும் அனுசரித்து வாழும் .
ஜனநாயக இந்தியா மற்ற சுதந்திர நாடுகளோடு நட்பை வளர்த்து, அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் இந்தியா உதவி செய்யும்.
பல நேரங்களில் இதை உறுதி செய்யும் விதமாக இந்தியா செயல் பட்டு உள்ளது. பூகம்பத்தினால் பாதிப்பு அடைந்த துருக்கிய நாட்டிற்கு மருந்து மற்றும் உணவு பொருள்களை அனுப்பி உதவி செய்தது. ஸ்ரீலங்கா பொருளாதாரத்தில் நலிவடைந்தபோது இந்தியா உடனடியாக செயல் பட்டு உதவியது. இப்படி இந்தியா செய்த உதவிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தியா சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தினை அடிப்படையாக வைத்து உண்மையான உலக ஒழுங்கை நிர்மானிக்க எல்லா வேலைகளையும் செய்யும்.
இப்போது நடந்து முடிந்த ஜீ 20 உச்சி மாநாட்டில் இந்தியா எடுத்த அனைத்து முடிவுகளும் காந்திஜியின் எண்ணத்தை நிறைவேற்றுவதாகவே அமைந்தது .
காந்திஜியின் இந்த “Village ஸ்வராஜ்” புத்தகம் இந்தியா எப்படி வளரவேண்டும் என்பதை முன்னரே எழுதி வைத்த ஓலை சுவடி போன்று நடந்து கொண்டிருப்பது மிகவும் வியக்கத்தக்கதாக உள்ளது.

பி.கே. சௌம்யநாராயணன்


Share it if you like it