இந்திய ராணுவத்துறையின் உற்பத்தி முதல் முறையாக 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ராணுவ உற்பத்தியில் உள்நாட்டு தொழிற்சாலைகளை ஊக்குவிக்க, கடந்த சில வருடங்களாவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ராணுவத் துறையில் இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரித்திருக்கிறது. அந்த வகையில், எதிர்வரும் 2024 – 25-ம் ஆண்டில், ராணுவ தளவாட ஏற்றுமதியை 35,000 கோடி ரூபாயாகவும், மொத்த உற்பத்தி மதிப்பை 1.75 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்த்த ராணுவ அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்து ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2021 – 22-ம் நிதியாண்டில், நமது ராணுவத் துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு 95,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2022 – 23-ம் நிதியாண்டில் 12 சதவீதம் உயர்ந்து, 1,06,800 கோடி ரூபாயை எட்டி இருக்கிறது. ராணுவ உற்பத்தியை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாகவே, உற்பத்தி மதிப்பு முதல்முறையாக 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது.
இந்த இலக்கை எட்டுவதற்காக, ராணுவ உற்பத்தித் துறையில் பல்வேறு கொள்கை சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஏராளமான தனியார் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ராணுவ உற்பத்திக்கு உதவின. கடந்த 7 ஆண்டுகளில் ராணுவ உற்பத்தியில் ஈடுபட, தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்கும் நடைமுறை 200 சதவீதம் அதிகரித்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.