உணவே மருந்து என்று இருந்த நம் பாரம்பரியத்தை அலட்சியப்படுத்தி நவீனம் என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் வெற்று சக்கைகள் ஒவ்வொன்றும் இன்று நம் உயிர் குடிக்கும் விஷமாக மாறி வருகிறது. பெற்றோர்களே! என் குழந்தை இட்லி- தோசை எல்லாம் சாப்பிடாது. புட்டு- இடியாப்பம் என்றால் என்னவென்று கூட தெரியாது. பீட்சா- பர்கர் டோனட் வகைதான் பிரியம் என்று வளர்வதை -பேசுவதை பெருமையாக எண்ணாதீர்கள்.மாறாக என் குழந்தைகள் பாரம்பரியமான உணவு வகைகளையும் வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியம் சார்ந்த பண்டங்களையும் தான் விரும்பி உண்பார்கள் அப்படித்தான் எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்திருக்கிறோம் என்று சொல்வதில் பெருமிதம் காணுங்கள்.
கார் -பங்களா -சொகுசு வாழ்க்கை- ஆடம்பர அடுக்ககம் என்று எல்லாம் மாறிய போதிலும் இன்னும் நாங்கள் ராகி களி-கம்மங்கூழ் சிவப்பரிசி புட்டு- பழைய கஞ்சி சாப்பிட தான் செய்கிறோம். எங்கள் குழந்தைகளும் வீட்டு முறை உணவை தான் விரும்பி உட்கொள்ளும் வகையில் வளர்த்திருக்கிறோம். அவர்களின் பிறந்தநாள் விழா – நண்பர்கள் கூடுகை என்றால் கூட உணவு பட்டியலில் அறுசுவை உணவும் – வரகு பாயாசம்- பொரி விளங்கா உருண்டை – உக்காரை அதிரசம் தான் இருக்கும் என்று பேசுவது தான் உண்மையான பெருமை என்பதை உணருங்கள்.
குழந்தைகளே ! நீங்கள் விருப்பம் போல் உண்டு மகிழவும், அதே நேரத்தில் உங்களின் உடல் ஆரோக்கியம் பலம் மெருகேற்றப்படவும் ஏராளமான உணவு பட்டியலும் ,உடல் நலம் காக்கும் வகை வகையான பாரம்பரிய உணவும் – தின் பண்டங்களும் நம்மிடத்திலே இருக்கிறது. உங்களுக்குதான் அதனருமை தெரியவில்லை. அல்லது உங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை .பார்ப்பதற்கு பள பளவென செயற்கை ருசி கொடுக்கும் பண்டங்கள் எல்லாம் உங்களின் உயிர் குடிக்கும் நஞ்சு என்பதை உணருங்கள். துரித உணவுகளுக்கும் சுகாதாரமற்ற அசைவ உணவுகள் தவிர்த்து ருசியும் ஆரோக்கியமும் தரும் நம் வீட்டு முறை உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
உங்களின் தேவை- விருப்பம் -ஆசை என்ன? என்பது மட்டும் தான் உங்களுக்கு தெரியும். ஆனால் உங்களின் உடல் மொழி- உணவு வழக்கம்- உங்கள் உடலின் ஒவ்வாமை பற்றி எல்லாம் உங்களின் பெற்றோருக்கு மட்டுமே நன்றாக தெரியும். அதனால் உணவுப் பழக்க விஷயத்தில் பெற்றோர் உங்களுக்கு கொடுக்கும் பட்டியலில் இருந்து மட்டுமே உங்களின் விருப்ப உணவு தேர்வு இருக்கட்டும். அதுவே உங்களின் உடல் ஆரோக்கியம்- உயிரை பாதுகாக்கும்.
கேஎஃப்சியும்- டோமினோசும் – மெக் டோனால்ட் களும் உங்களின் அடையாளமாக மாற்றி உயிரை தொலைத்து விடாதீர்கள். மேல்நாட்டு உணவுகள் தான் உயர்ந்தது என்று விட்டில் பூச்சியாய் மறைந்து விடாதீர்கள். சாக்லேட்- பிஸ்கட் – ஷவர்மா- என்ற அந்நிய குப்பைகளையும், துரித உணவுகளையும் தூக்கி எறிந்து விட்டு நம் வீட்டு வடை- போளி- பால் பாயாசம்- எள்ளுருண்டை- சிறுதானிய உணவுகள் என்று திரும்பி வாருங்கள்.
வீட்டில் சமைப்பதையும் அதற்கு தேவையான ஆயத்த பணிகள் செய்வதையும் கௌரவம் குறைச்சலாக நினைக்கும் பெண்களின் மனோபாவம் ஆபத்தானது. நாட்டிற்கு ராணியாக இருந்த போதிலும் சமையல் முதல் ஆலய உழவாரப் பணி முதல் ஒன்று விடாமல் சிறப்புற செய்து தங்களின் அப்பழுக்கில்லாத கடமையில் உயர்ந்து நின்ற நம் தேசத்தின் வரலாறு புகழும் பெண்களின் வாழ்க்கை கொடுக்கும் படிப்பினையை மறந்து விட வேண்டாம். வாழ்வின் ஒவ்வொரு பணிகளையும் கடமையையும் பொறுப்போடு கற்றுத் தேர்ந்து அதை சிறப்புடன் செய்த அர்ப்பணிப்பும் துணிச்சலும் தான் அவர்களை ஆளுமையாக உயர்த்தி வரலாற்றில் புகழோடு நிலை நிறுத்தி இருக்கிறது என்பதை உணருங்கள்.
நாட்டிற்கு ராணியாக இருந்தாலும் வீட்டின் பெண்களின் அடையாளம் சமையலறை ஆதிக்கமும் குடும்ப நிர்வாகமும் பிள்ளைகள் வளர்ப்பிலும் தான் பூரணம் ஆகிறது என்பதை சமகால பெண்கள் உணர்ந்து கொண்டால் குழந்தைகள் ஆரோக்கியமான உணவு உண்ணும் வளர்ப்பிற்குள் கொண்டு வரப்பட முடியும். அவர்கள் உண்ணும் உணவும் அருந்தும் வானங்களும் அவர்களின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பாதுகாக்கும் கவசங்களாக மாறும். குழந்தைகளும் தங்களின் விருப்ப உணவிற்கு முதலிடம் கொடுப்பதை விட வீட்டில் இருக்கும் பெரியவர்களின் அறிவுரைப்படி தனது உடலியல் மற்றும் உடல் நலன் பேணும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற தயாராகுங்கள்.