நேர்மையின் உருவம் கக்கன்!

நேர்மையின் உருவம் கக்கன்!

Share it if you like it

முன்னாள் அமைச்சரும், நேர்மையாளருமான திரு.கக்கன் பிறந்த தினமான இன்று (ஜூன் 18-ம் தேதி) அவரை நினைவுகூர்வோம்.

தமிழகத்தைச் சேர்ந்த சமூக நலனுக்காக பெரும் தொண்டாற்றியவர்களில் சிலரின் பெயர் பெரிதாக வெளியே தெரியாமல் போயிருக்கிறது. அத்தகைய பெருந்தகைகள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், மக்கள் சேவை ஒன்றையே மனதில் கொண்டு வாழ்ந்து மறைந்து போனார்கள். இன்றைய தலைமுறைக்கு சினிமா நடிகர்கள், நடிகையர்களைத் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு, மக்கள் தொண்டாற்றிய மேன்மையான, நேர்மையான கக்கன் அவர்களை தெரியுமா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். அதற்குக் காரணம், நேர்மையானவர்களை நாம் பெரிதாக கொண்டாடவில்லை என்பதுதான்.

1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டியில் பிறந்தார் கக்கன். முதலில் தொடக்கக் கல்வி பயின்றவர், தனது 12-வது வயதில் மேலே படிக்க முடியாமல், பண்ணை வேலை செய்ய ஆரம்பித்தார். கக்கனின் தந்தை ஒரு கிராம கோயில் பூசாரி. இதனால், பூசாரி கக்கன் என்றே அழைக்கப்பட்டார். ஏழ்மை காரணமாக பாதியில் படிப்பை விட்ட கக்கன், மீண்டும் கஷ்டப்பட்டு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பிறகு, காங்கிரஸ் கட்சியின் சுதந்திர போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் கக்கன்.

‘வெள்ளையனே வெளியேறு’ போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அமைக்கப்பட்ட அரசியல் சாசன சட்டசபையில் தமிழகத்தின் சார்பாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1950 வரை பணியாற்றினார். 1952 முதல் 1957-ம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1956-ல் அப்போதைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் கக்கன். தொடர்ந்து, காமராஜர் முதல்வராக இருந்தபோது 1957 முதல் 1967-ம் ஆண்டு வரை திரு.கக்கன் பொதுப்பணித்துறை, ஹரிஜன நலத்துறை, விவசாயத்துறை, உள்துறை என பல துறைகளின் அமைச்சராக, பல நல்ல பணிகளை மேற்கொண்டார்.

கக்கனின் சாதனைகள்

1939-ம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் ஆலய பிரவேசம் செய்வது தொடர்பான ஆலய பிரவேச அனுமதி சட்டத்தை ராஜாஜி தலைமையிலான மாகாண அரசு இயற்றியது. மதுரை வைத்தியநாத அய்யரின் தலைமையின் கீழ் கக்கன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலய பிரவேசத்தை மேற்கொண்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். குறிப்பாக, கக்கனின் இந்தச் செயலை காந்தி ஜி பாராட்டினார். 1957-ல் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது மேட்டூர் அணை, வைகை அணை கட்டுவதற்கு காமராஜருக்கு பெரும் உதவியாக இருந்தார். இதனால், லட்சக்கணக்கான ஏழை விவசாயிகள் பலனடைந்தனர். மக்களுக்காக வீட்டு வசதி வாரியம் அமைத்து பல நூறு மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுத்தார்.

1963 முதல் 1967 வரை உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பொதுவாக போலீஸ் இலாகா, உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டில் இருப்பதால் முதலமைச்சர்கள் உள்துறையினை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள். ஆனால் காமராஜரோ, கக்கன் மேல் வைத்திருந்த நம்பிக்கை காரணமாக, உள்துறை அமைச்சராக கக்கனை நியமித்தார். போலீஸ் மந்திரி என அன்போடு அழைக்கப்பட்ட கக்கன், போலீஸ் இலாகாவில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார். காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அவர்களின் வேலை சுமையைக் குறைத்தது, லஞ்ச ஒழிப்புத் துறையை தொடங்கியது என பல பணிகளைச் செய்தார்.

நேர்மையின் மொத்த உருவம் கக்கன்

அமைச்சராக பல வருடங்கள் பதவியில் இருந்தும் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்தார். அரசாங்க பணத்தில் வாழாமல், தன் மனைவி ஆசிரியையாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் குடும்பம் நடத்தினார். தன் தம்பிக்கு முறையாக, தாழ்த்தப்பட்டோர் நல இயக்குநரால் வழங்கப்பட்ட மனை ஒதுக்கீட்டு பத்திரத்தை ரத்து செய்தார். பதவி காலத்திலும் சரி, பிறகும் சரி, யாரிடமிருந்தும் எந்தவித சலுகைகளையோ, பரிசு பொருட்களை பெறாமல் வாழ்ந்த நேர்மையாளர். இவரது தம்பி தகுதியின் அடிப்படையிலேயே போலீஸ் சேர தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘தான் அமைச்சர் பதவியில் இருப்பதாலேயே இந்த போலீஸ் வேலையை அவர் பெற்றார் என்று சமுதாயம் சொல்லும்’ என்று சொல்லி அவரை போலீஸ் பணியில் சேரவிடாமல் செய்தார். விடுதலைப் போராட்ட வீரர்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிலத்தை, வினோபா பாவேவின் பூதான் இயக்கத்திற்கு நன்கொடையாக கொடுத்தார்.

இறுதிக்காலம்

1978-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ஒரு நாள் காலை காரிலிருந்து இறங்கும்போது ஒரு வயதான பெண்மணி தன்னைக் காண காத்திருப்பதைப் பார்த்து, அவரை நோக்கி சென்று ‘’வணக்கம்’’ கூறி, ‘என்ன வேண்டும் சொல்லுங்க’ என்று கேட்டார். அந்த வயதான பெண்மணி கக்கனின் மனைவி சொர்ணம் பார்வதி. ‘’நாங்கள் குடியிருந்த அரசுக்கு சொந்தமான வீட்டின் மாத வாடகை 170 ரூபாயை வறுமை காரணமாக பல மாதங்கள் செலுத்த முடியவில்லை என்பதால், வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்திருக்கிறது’’ என்று கூறினார்.

எம்.ஜி.ஆர். உடனடியாக செயல்பட்டு, பல மாதங்கள் நிலுவையிலிருந்த வாடகை பணத்தை தன் சொந்த பணத்தில் செலுத்தியது மட்டுமின்றி, கக்கன் தனது இறுதிக்காலம் வரை குடியிருக்க இலவசமாக அனுமதியும் பெற்றுத் தந்தார். மேலும், கக்கன் அவர்களுக்கு மாதம் ரூ.500 வழங்குமாறு அரசாணை பிறப்பித்தார்.
1967-ல் தேர்தலில் தோற்ற பிறகு சிறிது சிறிதாக அரசியல் களத்திலிருந்து விலகி வாழ ஆரம்பித்தார் கக்கன். பின்னர், முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர், சிறப்பு அறையில் தங்கி சிகிச்சை பெற தகுதியிருந்தும் அரசு மருத்துவமனையில் ஒரு சாதாரண குடிமகன் போல் சாதாரண வார்டில் சேர்ந்து சிகிச்சை பெற்றார் என்பது தற்போதைய உலகில் ஆச்சரியமான செய்தி.

கட்டுரையாளர்: சௌமிய நாராயணன்


Share it if you like it