தி.மு.க. தலைவரின் புறக்கணிப்பால் தீக்குளிக்க முயன்ற சுயேட்சை பெண் கவுன்சிலர்கள்!

தி.மு.க. தலைவரின் புறக்கணிப்பால் தீக்குளிக்க முயன்ற சுயேட்சை பெண் கவுன்சிலர்கள்!

Share it if you like it

தாங்கள் சுயேட்சை கவுன்சிலர்களாக இருப்பதாலும், துணைத் தலைவர் தேர்தலில் எதிராக வாக்களித்ததாலும், தங்களது வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர் புறக்கணிப்பதாகக் கூறி, சுயேட்சை பெண் கவுன்சிலர்கள் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பத்மனாபபுரம் நகராட்சி. இதன் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த அருள்சோபன். அதேபோல, துணைத் தலைவராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த மணி. இவர், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்து விட்டார். இதையடுத்து, துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ.க.வைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன், தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயசுதா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், உன்னிகிருஷ்ணன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர், ஏற்கெனவே நகராட்சி தலைவர் தேர்தலில் அருள்சோபனை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 7 பேர் மட்டுமே தி.மு.க. கவுன்சிலர்கள். இதிலும், துணைத் தலைவராக இருந்த மணி இறந்து விட்டதால் தி.மு.க.வின் பலம் 6 கவுன்சிலர்களாக குறைந்து விட்டது. அதேசமயம், பா.ஜ.க.வுக்கு 7 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். அதோடு, சுயேட்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு இணையாக 6 பேர் இருக்கிறார்கள். ஒருவர் மதசார்பற்றி ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். ஆகவே, சுயேட்சை கவுன்சிலர்களின் ஆதரவோடுதான் பா.ஜ.க.வைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் வெற்றிபெற்றார் என்பதால், தி.மு.க.வைச் சேர்ந்த தலைவர் அருள்சோபன், சுயேட்சை கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வந்திருக்கிறார். இதனால், சுயேட்சை கவுன்சிலர்கள் கடும் அதிருப்தி பிளஸ் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

இந்தி நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்மனாபபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் அருள்சோபன் தலைமையில் நடந்தது. அப்போது, நிகழாண்டு முதலமைச்சர் நிதியிலிருந்து பத்மனாமபுரம் நகராட்சிக்கு 4.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தலைவர் அருள்சோபன் கூறினார். உடனே, 4 மற்றும் 13-வது வார்டு கவுன்சிலர்களான மும்தாஜ் மற்றும் சபீனா ஆகியோர் எழுந்து, தங்களது வார்டுகளுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், எங்களது வார்டில் முறையான சாலை வசதி இல்லை. தலைவர் வேண்டுமென்றே எங்களது வார்டுகளை புறக்கணிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர்.

மேலும், பேசிக்கொண்டிருக்கும்போதே மும்தாஜும், சபீனாவும் திடீரென தாங்கள் பைகளில் மறைத்துக் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பதட்டமடைந்த நகராட்சி கவுன்சிலர்களும், அதிகாரிகளும் ஓடிவந்து தடுத்தனர். பின்னர், இதுகுறித்து நகராட்சித் தலைவர் அருள்சோபன் தக்கலை போலீஸில் புகார் செய்தார். இதன் பேரில், தற்கொலைக்கு முயற்சி மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில், சுயேட்சை கவுன்சிலர்கள் மும்தாஜ் மற்றும் சபீனா ஆகியோர் மீது தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தங்களது வார்டுகள் தி.மு.க. சேர்மனால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, சுயேட்சை பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it