ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா – உலகம் முழுவதும் களை கட்டும் சனாதன பண்டிகை கொண்டாட்டம்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா – உலகம் முழுவதும் களை கட்டும் சனாதன பண்டிகை கொண்டாட்டம்

Share it if you like it

ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் எட்டாவது குழந்தையாக யது வம்சத்தில் வாசுதேவன் தேவகியரின் வம்ச விளக்காக மதுராவின் காராகிரக சிறையில் பிறந்தவன் மாதவன். தன் ஏழு குழந்தைகளை கம்சனின் வன்மத்திற்கு இழந்த தேவகி வாசுதேவன் தம்பதியர் அதர்மியான கம்சனை அழிக்க பிறந்த இந்த எட்டாவது குழந்தையை பாதுகாத்து அதன் மூலம் தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற உறுதியோடு காரிருளில் இறைவனின் துணையோடு கொட்டும் மழையில் மூங்கில் கூடையில் மூவுலகையும் காத்து நிற்கும் காவல் கொடியோனை குழந்தையாக கிடத்திக் கொண்டு பெருகி பாயும் யமுனையை கடந்து போய் தனது நண்பன் நந்தகோபனின் இல்லத்தில் சேர்த்து வந்தார். விஷயம் அறிந்தால் தங்களின் உயிருக்கு கம்சனால் ஆபத்து நேரும் என்ற நிலையில் கூட தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் தம் குழந்தையின் உயிரை காப்பாற்றும் விதமாக பூமியில் தாய் தந்தையருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்ற நியதியை தனது ஜென்ம நாளிலேயே உலகிற்கு உணர்த்தியவன் கிருஷ்ணன்.

நந்த கிராமத்தில் யசோதையின் மகனாக பலராமனின் சோதரனாக யாதவ குல சொந்தங்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஆநிரைகளை மேய்க்கும் சிறுவர் கூட்டத்தின் தலைவனாக கோபாலனாக வளர்ந்தவன். குழல் ஊதி காணம் செய்து ஆநிரை முதல் நந்த கிராமம் வரை அனைவரையும் தன் மீது அன்பும் பாசமும் பொழிய செய்தவன். தீராத விளையாட்டுப் பிள்ளையாகி எந்நேரமும் சேட்டைகளில் ஈடுபட்டு பொல்லாத பிள்ளை இவன் என்று பெயர் வாங்கியவன். குறும்புத்தனம் மிகுதியான போதிலும் அனைவரின் செல்ல பிள்ளையாக சீர்மிகு கண்ணனாக சீரோடும் சிறப்போடும் வளர்ந்தவள் ஸ்ரீ கிருஷ்ணன் .

அவனது இந்த ஜென்ம தினத்தை அன்றைய பொழுதிலேயே நந்த கிராமம் பெரும் திருவிழாவைப் போல கொண்டாடி மகிழ்ந்தது. கர்ப்பத்திலேயே இடம் மாறி தனது உயிர் ஆபத்தை எதிர்கொண்டு விண்ணில் நட்சத்திரமாக நிலைபெற்ற தனது சகோதரி ரோகிணிக்கு கௌரவம் சேர்க்கும் வகையில் அந்த ரோகிணி நட்சத்திரத்தையே தனது ஜென்ம நட்சத்திரம் ஆக்கி வரமளித்தார் கிருஷ்ணர். அவ்வகையில் இன்றளவும் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் கிருஷ்ண வழிபாட்டிற்கு உகந்ததாகும் . துவாபர யுகத்தின் இறுதியில் நடந்த தர்மத்தின் ஜனனமாக இருந்த கிருஷ்ண ஜெயந்தி யுகங்களைக் கடந்து இந்த கலியுகத்திலும் கிருஷ்ணனின் அன்பிற்கும் பக்திக்கும் கட்டுண்டு ஆண்டுதோறும் ஜென்மாஷ்டமி நாளை கொண்டாடி மகிழ்கிறது.

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி நாளில் வட பாரதம் ஜென்மாஷ்டமி என்றும் தென் பாரதம் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்ற கொண்டாடும் வழக்கம் உண்டு. உலகம் முழுவதிலும் உள்ள சனாதன மக்கள் கோகுல அஷ்டமி என்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை உலகம் முழுவதிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் பூஜைகள் ஹோமங்கள் விசேஷ வழிபாடுகள் மூலம் கொண்டாடுகிறார்கள். சமீப காலமாக ஐரோப்பா யூனியன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா பெரும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கால் பதித்து வரும் இஸ்கான் கிருஷ்ணா பக்தி மையம் அதன் கிளைகள் தோறும் தலைமையாகக் கொண்டு இந்த கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சவங்கள் சர்வதேச அளவில் தற்போது பரவலாகி வருகிறது.

வட பாரதத்தில் இன்றளவும் யமுனை நதிக்கரையில் கம்சனின் கோட்டையில் தேவகி சிறை வைக்கப்பட்டதாக சொன்ன அந்த காராகிரக சிறைப்பகுதி கிருஷ்ணன் ஜன்மாஷ்டமி பூமியாக வணங்கப்படுகிறது. கிருஷ்ணன் பிறந்த மதுரா ஜென்ம பூமியாகவும் அவன் வளர்ந்த நந்த கிராமம் கிருஷ்ணனின் தர்ம பூமியாகவும் கிருஷ்ணன் கட்டமைத்து நல்லாட்சி புரிந்த துவாரகாபுரி கர்ம பூமியாகவும் இன்றளவும் வணங்கப்படுகிறது. மனித வாழ்வை நெறிப்படுத்தி சாமானியன் முதல் ஆட்சியாளர் வரை அனைவருக்கும் வழிகாட்டுதலை வழங்கி பக்தி நெறியும் முக்தி நெறியும் ஒரு சேர பயிற்றுவிக்கும் பகவத் கீதை என்னும் பாடம் கொடுத்த குருஷேத்திர யுத்த பூமி இன்றளவும் ஸ்ரீ கிருஷ்ணனின் தர்மஷேத்திர பூமியாக வணங்கப்படுகிறது.

கிருஷ்ணனின் மதுரா துவாரகா உள்ளிட்ட புண்ணிய தலங்கள் முதல் எண்ணற்ற விஷ்ணு ஆலயங்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்கள் என்று நாராயணன் கோவில் கொண்ட அத்தனை வழிபாட்டு தலங்களிலும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அவரவர் இல்லங்களில் கிருஷ்ணனை சிலை வைத்து வழிபடும் பழக்கமும் உண்டு ‌

ஸ்ரீ கிருஷ்ணனின் பிரியப்பட்ட வெண்ணை அவல் பொரிகடலை சர்க்கரை அமுது சித்திரான்னம் பருப்பு பாயாசம் லட்டு பாலகிருஷ்ணனின் விருப்ப பண்டங்களான தட்டை முறுக்கு சீடை எள் உருண்டை கிருஷ்ணனுக்கு உகந்த அர்ப்பணமான துளசி தாமரை மலர் பானகம் கொண்டு கிருஷ்ண ஜெயந்தி பூஜை நிறைவேறும். துளசி மாலை பல வண்ண மாலை பத்ம மலர் மாலை என்று கையில் குழலும் சிகையில் மயில் தோகையும் உதட்டு புன்முறுவலும் மேனி சாய்க்க கன்றுடன் கூடிய பசுவும் என்று அவனது தெய்வீக திருமேனி அருவமாகவும் உருவமாகவும் சிலை வழிபாடாகவும் அவனது அன்பர்களால் வணங்கப்படுகிறது.

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அந்த கிருஷ்ணனையே குழந்தையாக பாவித்து சிரத்தையோடு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னெடுப்பதும் அவன் அருளாலே புத்திர பாக்கியம் பெற்று அவனது திருநாமத்தையே குழந்தைக்கு நாமகரணம் செய்வித்து நன்றியோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதும் ஸ்ரீ கிருஷ்ணன் என்றைக்கும் அன்பும் கருணையும் அன்பர்களுக்கு வாரி வழங்கும் கருணைக்கடல் என்பதன் சாட்சியம்.

பாவை நோன்பு என்று மார்கழி மாதத்தில் சிரத்தையுடன் நோன்புற்று காவல் கொடியேந்தும் நாராயணனே தனக்கு மணவாளனாக வேண்டும் என்ற கோதை நாச்சியளின் பாமாலைக்கு இறங்கி வந்து அவளின் கரம் பற்றிய கமலக்கண்ணன் இன்றளவும் வேண்டுவோர் வேண்டுதலை பக்தியை மெச்சி அவர்களின் துயர் துடைத்து சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அருள் பாலிக்கிறான்.

அபயம் என்று அழைத்த கணமே துருபதகுமாரியின் மானம் காத்தவன். இன்றளவும் கையறு நிலையில் இருக்கும் எவர் ஒருவருக்கும் கிருஷ்ணா என்று அழைத்த கணம் மனதில் ஒரு நம்பிக்கையை தெளிவை கொடுத்து தர்மத்தின் வழியில் வழி நடத்திப் போகிறான். அந்த உள்ளுணர்வும் மானுடர்களுக்கு அது வழங்கும் உத்வேகமும் தான் இன்றளவும் இந்த மண்ணில் கிருஷ்ண பிரேமையும் பக்தியும் குறைப்படாமல் பாதுகாத்து வருகிறது.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனை துறைவனை

ஆயர் குலத் தோன்றும் அணிவிளக்கை

தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து யாம் தூ மலர் தூவி தொழுது

வாயால் பாடி மனத்தால் சேவிக்க

போய வினைகளும் புகுத்தருவான்

பிழைகளும் தீயினில் தூசாகுமாம்

செப்பேலோர் எம்பாவாய் .!

என்ற கோதை நாச்சியார் ஆண்டாளின் திரு மொழியின் படி ஆயர் குலத்தில் பிறந்து அரியனை அமர்ந்து தர்மத்தின் வழியில் மக்களும் நாடும் சுபிட்சம் பெற வழிகாட்டிய அந்த தர்மத்தின் திருவருவமான ஸ்ரீ கிருஷ்ணனின் அவதார திருநாளான இந்த ஜென்மாஷ்டமி நாளில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை ஆத்மார்த்தமான உள்ளன்போடு கிருஷ்ணா பிரேமயுடன் சேவித்து ஸ்ரீ கிருஷ்ணனின் பிரியத்திற்கு பாக்கியமாவோம்.


Share it if you like it