பாஞ்சாலம் தந்திட்ட பாரதத்தின் சுதந்திர போராட்ட மாவீரன் பாரத தேவியின் சிங்க மகனான மாவீரன் பகத்சிங்கை பாரதம் அவனது பிறந்த நாளில் கண்ணீரோடு வணங்குகிறது. மாவீரன் பகத்சிங் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் ஹிந்துஸ்தானத்தின் தேசபிமானிகளின் மனதில் தேசபக்தி பீறிடும். அவனது பெயரை உச்சரிக்கும் பொழுதே தேச விரோதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் ஆழ்மனதில் அச்சம் பீடிக்கும் . பகத்சிங் என்னும் பெயரை உச்சரிக்கும் போதே பச்சிளம் குழந்தை முதல் வயோதிகன் வரையிலும் நாடி நரம்புகளில் தேசியம் என்ற உணர்வு உத்வேகமாக உற்சாகமாக பரவு செய்யும் ஒரு மகா மந்திரம் . பாரதத்தின் பகத்சிங் என்னும் மாவீரனின் பிறவி நாமம்.
காலம் காலமாக ஹிந்துஸ்தானத்தின் காவல் குடிகளாக எல்லை சாமிகளாக வீரம் தீரம் துணிவு தியாகத்தின் அடையாளமாக வாழ்ந்து வந்த சீக்கிய சமூகத்தில் வம்ச விளக்கு பகத் சிங். தற்போதைய பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் பிறந்தவன். பகத்சிங் செல்வீகமான தேசபக்தியும் சீக்கிய மத உணர்வில் ஆழ்ந்திருந்த பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவன். இள வயதிலேயே தனது குடும்பத்தில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தனது குடும்பத்தின் முன்னோரை அவரது இழப்பையும் பார்த்து வெகுண்டு எழுந்தவன்.
வளரும் வயதிலேயே அவனோடு சேர்த்து இந்த தேசத்தின் சுதந்திர வேட்கையும் பிரிட்டிஷாருக்கு எதிரான போர் குணத்தையும் சேர்த்தே வளர்த்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் கடுமையான அடக்கு முறையையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்யும் அந்நியனான பிரிட்டிஷாரின் முன் நம் மக்கள் அகிம்சை என்ற பெயரில் பலியாடுகளாக நிறுத்தப்படுவதும் அவர்கள் அரசு எந்திரத்தால் கொடூரமாக கொல்லப்படுவதையும் கண்டு வெகுண்டு எழுந்தவன். பாரதத்தின் சுதந்திரம் என்பது நமது பிறப்புரிமை . அதை பிரிட்டிஷார் இடத்தில் யாசகமாக பிச்சை கேட்டு வாங்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. நம்முடைய உரிமையை நாம் வென்றெடுக்க வேண்டியதே நம் முன் இருக்கும் சவால். அதற்கு தேவை நமக்கு பிரிட்டிஷாரை அஞ்சி நடுங்கச் செய்யும் ஆயுதப் போராட்டமும் பதிலடி தாக்குதலும் தான் என்பதில் பகத்சிங் தெளிவாக இருந்தான் .
சந்திரசேகர ஆசாத் என்னும் தன் எழுச்சியான ஒரு விடுதலை மாவீரனின் உரிய நட்பும் உற்ற தோழமையும் சரியான வழிகாட்டுதலும் பகத்சிங்கை ஒரு மாவீரனாக அடையாளம் காட்டியது . பகத்சிங்கின் துணிச்சலான நடவடிக்கைகள் புரட்சிகரமான போராட்டங்கள் அதன் மூலமாக பிரிட்டிஷருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு ஒரு பயத்தை விதைத்தது. மறுபுறம் பிரிட்டிஷாரின் அடிவருடிகளாக பாரதத்தின் விடுதலைப் போராட்டத்தை நீர்க்கச் செய்யும் விதமாக அகிம்சா வாதிகள் என்ற பெயரில் உள்ளிருந்து ஊடருத்தவர்களுக்கு பகத்சிங் ஒரு பெரும் தலைவலியாக உருவெடுத்தான்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை அதன் காரண கர்த்தாவான ஜெனரல் டயர் என்பவனின் படுகொலை அதனால் லண்டனிலேயே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட உத்தம் சிங் மரணம். லாலா லஜபதி ராய் பால கங்காதர திலகர் உள்ளிட்டவர்கள் மீது பிரிட்டிஷ் அரசு கட்டவிழ்த்து விட்ட வன்முறை அராஜகம் எல்லாம் ஒன்று சேர்ந்து பகத்சிங்கை பிரிட்டிஷாரை எதிர்க்கும் நிலையில் கொண்டு வந்து நிறுத்தியது.
பகத்சிங் தனது சகாக்கள் ராஜகுரு சுகதேவ் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொடர்ச்சியாக பிரிட்டிஷாருக்கு எதிராக தொடர் தாக்குதலை நிகழ்த்தினார். சந்திரசேகர ஆசாத்தை விடுவிக்கும் எண்ணம் தொடர்ச்சியாக பாரதத்தின் விடுதலைப் போரில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுவது அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுவது உள்ளிட்டவற்றிற்கு முடிவு கட்டும் விதமாக தன் சகாக்களோடு சேர்ந்து பிரிட்டிஷாரின் நீதிமன்றம் காவல்துறை உள்ளிட்டவர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நிகழ்த்தினார். அதன் காரணமாக தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டு பிரிட்டிஷாரின் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டவன். பிரிட்டிஷாரின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் சிறை வைக்கப்பட்டார்.
பகத்சிங் ராஜகுரு சுகதேவ் உள்ளிட்டவர்கள் பாரதத்தின் விடுதலைக்காக போராடியவர்கள். வசந்த காலத்தில் வாழ வேண்டிய இளம் வயது பாலகர்கள் . தங்களின் வாழ்வை இளமையை இந்த தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள். அவர்கள் பிரிட்டிஷாரின் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று சர்தார் வல்லபாய் பட்டேல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டவர்கள் பெரும் பிரயத்தனம் செய்தார்கள் . பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து கூட பகத்சிங் உள்ளிட்ட அவர்களை விடுவித்து விட முடியும். ஆனால் அகிம்சை என்ற பெயரில் உள்நாட்டில் பிரிட்டிஷாரின் அடிவருடிகளாகவே செயல்பட்ட பலரது பிடியிலிருந்தும் பகத்சிங் உள்ளிட்டவர்களை காப்பாற்றுவது கடினம் என்ற நிலையில் சர்தார் வல்லபாய் பட்டேலின் முயற்சிகள் தோல்வி அடைந்தது
முக்கிய தலைவர்கள் என்று இந்த தேசம் அடையாளம் காணப்பட்ட தலைமைகள் எல்லாம் பகத்சிங் ராஜகுரு உள்ளிட்ட அவர்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாகவே அடையாளப்படுத்தினார்கள் . அவர்களின் போராட்ட குணமும் பிரிட்டிஷாரின் ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளின் எதிர்வினையாக சட்டப்படி அவர்கள் நீதிமன்றத்தின் தண்டனைகளுக்கு உரியவர்கள் தான் என்று பிரிட்டிஷாரின் மரண தண்டனைக்கு முழுமையாக ஆதரவு அளித்தார்கள் . இதை கடுமையாக எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்தார் வல்லபாய் பட்டேல் அவரை மூத்த சகோதரர் கோவிந்த் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட பலரும் போர்க்கொடி தூக்கினார்கள் . ஆனால் அத்தனையும் மீறி தேசிய காங்கிரஸ் மாநாடு திட்டமிட்டபடி நடப்பதற்கு முன்பாகவே பகத்சிங் ராஜகுரு சுகதேவ் உள்ளிட்டவர்கள் தூக்கிலிட வேண்டும் என்ற பரிந்துரை பிரிட்டிஷ் அரசருக்கு போய் சேர்ந்திருந்தது.
நடக்க இருக்கும் மாநாட்டில் பகத்சிங் ராஜகுரு உள்ளிட்டவர்களை விடுவிக்க கோரிய தீர்மானத்தை காங்கிரஸ் சார்பில் முன்மொழிய வேண்டும். அதன் மூலம் பிரிட்டிஷ் அரசருக்கு பெரும் நெருக்கடி கொடுத்து எப்படியாவது பகத்சிங் உள்ளிட்டவர்களை விடுவித்த விட வேண்டும் என்று நேதாஜி பட்டேல் உள்ளிட்டவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த மாநாட்டிற்கு முன்பாகவே அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றி விட வேண்டும் என்று பிரிட்டிஷாரம் அவர்களின் அடிவருடிகளாக இருந்த உள்நாட்டு துரோகிகளும் திட்டமிட்டார்கள். அதன் அடிப்படையில் காங்கிரஸின் தேசிய மாநாடு நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பாகவே தற்போதைய பாகிஸ்தானில் லாகூரில் சிறை வைக்கப்பட்டிருந்த பகத்சிங் உள்ளிட்ட அவரது சகாக்கள் அனைவரும் ஒரு நள்ளிரவில் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களின் உடலும் பெற்றோரிடம் உரிய வகையில் ஒப்படைக்கப்படாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அவசர அவசரமாக ராவி நதிக்கரையில் இரவோடு இரவாக எரியூட்டப்பட்டது. அங்கு கூடிய பாரதத்தின் தாய்மார்கள் எப்படியாவது மீட்டு விடலாம் என்று காத்திருந்த தங்களின் வீர மைந்தன் தூக்கிலிடப்பட்டு அவனது சடலம் எரியூட்டப்பட்டதில் மனம் அதைப் பதைத்தார்கள். ராவி நதி கரையில் விரவி இருந்த பகத்சிங் சாம்பலை அள்ளி எடுத்து பாரதத்தின் தாய்கள் தங்களின் அடிவயிற்றில் பூசிக்கொண்டு மீண்டும் பிறந்து வருவாயடா! சிங்க மகனே என்று கதறி அழுதது இன்றளவும் லாகூரின் சிறைகளிலும் பாரதத்தின் எட்டு திசையிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தின் கதறலாக என்றைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
உள்நாட்டு துரோகம் துணை நின்றதால் பிரிட்டிஷாரின் அதிகாரமும் ஆட்சி எந்திரமும் பகத்சிங்கையும் அவனது சகாக்களையும் தூக்கிலிட்டு மரணிக்க வைத்தது . அவன் போன்ற மாவீரர்கள் இருந்தால் தங்களின் இயக்கமும் பெயரும் புகழும் பங்கப்பட்டு விடும் என்று பிரிட்டிஷாரின் அடிவருடிகளும் அவர்களது மரணத்திற்கு முழுமையாக ஆதரவளித்து துணை நின்றார்கள் அந்த வகையில் முழுவதும் கால் நூற்றாண்டு கூட வாழாத 23 வயதே நிரம்பிய இளைஞன் தனது சகாக்களோடு பாரதத்தின் விடுதலைக்காக தாமாக முன்வந்து தூக்குக் கயிறு முத்தமிட்டு மரண தண்டனையை ஏற்றுக் கொண்டான்.
மரண தண்டனை உறுதியான நிலையிலும் தனது தந்தையார் பிரிட்டிஷாரின் ஆட்சியாளர்களுக்கு கருணை வேண்டி மனு கொடுத்த விவரம் அறிந்து தந்தையாரை வரவழைத்து கடிந்து கொண்டவன் பகத்சிங். உண்மையில் தனக்கு மரண தண்டனையை விட நீங்கள் பிரிட்டிஷாரிடம் பிச்சை கேட்டு நிற்பது தான் மிகவும் ரணமாக இருக்கிறது .இதை விடவும் மரணம் எனக்கும் மேலானது தான் என்று பேசியவன். அவனது மனக்குமுறலை உணர்ந்து கொண்ட தந்தையார் தாமாக முன்வந்து தனது கருணை மனுவை திரும்ப பெற்றுக் கொண்டு தனது மகனின் மரண தண்டனையை ஸ்வீகரித்தவர். ஹிந்துஸ்தானத்தின் தாய்களுக்கு புத்திர சோகம் என்பது யுக யுகமாக தொடரும் சாபக்கேடு தான் .அந்த வகையில் தான் கண்முன்னே வாழ்வில் வளமாக வாழ வேண்டிய வயதில் தன் மகன் தேசத்தின் விடுதலைக்காக தாமாக முன்வந்து மரண தண்டனையை ஸ்ரவீகரிக்கும் நிலையிலும் அவரது தாய் எந்தவித பின்னடைவும் மனப்பதட்டமும் இன்றி இறுதியாக மகனை சந்திக்கும் போது கூட அவனது போராட்டத்தையும் தேசத்தின் மீது கொண்ட பற்றையும் முழுமையாக புரிந்து கொண்டு ஆதரவு அளித்தவர். இன்று இல்லையேல் என்றேனும் ஒரு நாள் உனது கனவான பாரதத்தின் முழுமையான விடுதலை நிச்சயம் வென்றெடுக்க முடியும் மகனே அதை காண்பதற்கு ஏதேனும் ஒரு பிறவியில் நீ மீண்டும் பிறந்து வருவாய் என்று தன் மகனுக்கு ஆறுதல் அளித்த வீரத்தாய் அவள் . பகத்சிங் என்னும் மகனைப் பெற்றெடுத்த பாரதத்தின் அந்தப் புண்ணிய தாய் அவளைப் போன்ற எண்ணற்ற தாய்களின் வீரமும் தியாகமும் புத்திரர்களின் இழப்பும் தான் இன்றளவும் இந்த தேசத்தை பாதுகாத்து வருகிறது.
பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டு லாகூரில் சிறை வைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டவன் பகத்சிங் . ஆனால் சுதந்திர பாரதத்தில் கூட அவன் ஆட்சியாளர்களால் தீவிரவாதியாகவே அடையாளம் காணப்பட்டது தான் இந்த தேசத்தின் துரதிருஷ்டம் . கடந்த கால ஆட்சியாளர்கள் எந்த அளவிற்கு பிரிட்டிஷாரின் அடிவருடியாக செயல்பட்டார்கள் என்பதற்கான சாட்சியம்.
நேதாஜி சுபாஷுக்கு வழங்கப்பட்டது போல பகத்சிங்கிற்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். அவனது வீரத்தை தேசபக்தியை போற்றும் வகையில் உரிய நினைவிடத்தை அமைத்து அவனது வீரம் கௌரவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனுவை கடந்த கால 2004-2014 ஆட்சியில் மத்திய அரசுக்கு பகத்சிங் வழிவந்த சீக்கிய சமூகத்தில் இருந்தும் இதர பல்வேறு தேச அபிமான குழுக்கள் இடம் இருந்தும் கோரிக்கையாக போய் சேர்ந்தது. மனுவை பரிசீலித்த அப்போதைய மத்திய அரசு பகத்சிங் ராஜகுரு சுகதேவ் உள்ளிட்டவர்கள் தீவிரவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளாக குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு மரண தண்டனையை அனுபவித்தவர்கள். அதனால் அவர்களை தேசம் எந்த வகையிலும் கௌரவிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று பதிலளித்தார்கள். அவர்களுக்கு உரிய நினைவு மரியாதையையும் அரசின் சார்பில் செய்ய முடியாது என்று தெளிவான விளக்கத்தை கொடுத்தார்கள். ஆட்சியாளர்கள் மாறினாலும் தலைமுறைகள் மாறினாலும் நாங்கள் என்றைக்கும் பிரிட்டிஷாரின் வழிவந்தவர்களே என்பதை நிரூபித்தார்கள்.
பகத்சிங் என்னும் மாவீரனை பிரிட்டிஷார் மரண தண்டனையால் கொன்றிருக்கலாம். அவனைத் தீவிரவாதி பயங்கரவாதி என்று உள்நாட்டில் இருக்கும் அஹிம்சவாதிகளும் கொச்சைப்படுத்தி இருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் முழுமையான விடுதலை பாரதத்தின் பரிபூரண சுயராஜ்யம் ஒன்றே இலக்கு என்ற திட்டமிட்ட போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். தேசத்தின் விடுதலையில் சமரசம் இல்லை அதற்காக பிரிட்டிஷாரிடமும் சமரசம் இல்லை என்று அர்ப்பணிப்போடு பாரதத்தின் சுதந்திர வேள்வி தீயில் தன்னை ஆகுதியாக அளித்தவன். அவனது வீரமும் தியாகமும் அவன் பிறந்திட்ட சீக்கிய சமூகத்திற்கு என்றைக்கும் உரிய கௌரவத்தையும் பெருமிதத்தையும் தேடி கொடுத்துக்கொண்டே இருக்கும் . அவனது பிறந்த பூமியும் நினைவு இடமும் கூட சீக்கியர்களின் உயிரை வதைக்கும் விதமாக சுதந்திர காலத்தில் பாகிஸ்தான் வசம் போனது ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆனாலும் என்றேனும் ஒரு நாள் அவனுக்கு உரிய கௌரவம் இந்த தேசத்தில் ஆட்சியாளர்களால் உரிய வகையில் முன்னெடுக்கப்படும். அன்று அவன் சிறைப்பட்ட லாகூர் சிறைச்சாலையும் அவனது சிதை எரிக்கப்பட்ட ராவி நதி கரையும் அவரது பெயரை பாடி நிச்சயம் கௌரவம் பெறும். அன்று உலக அளவில் பகத்சிங்கின் வீரமும் தேசப்பற்றும் துணிவும் தியாகமும் சபை ஏறும்.அதுவே அந்த மாவீரனின் தேச பக்திக்கும் உயிர் தியாகத்திற்கும் பாரதம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.