புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில், செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் கலந்து கொண்டனர். அவர்கள், முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓதி, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதையடுத்து, புனித செங்கோல் முன்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார். அதன்பின்னர் புனித செங்கோலை சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கைக்கு அருகில் நிறுவினார்.
இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் : “தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இன்று இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம். செங்கோலை போற்றும் பிரதமர் மோடி அவர்களே, உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர். பெரிய விசயம்!” இவ்வாறு சீனு ராமசாமி கூறியுள்ளார்.