கன்னியாகுமரியில் மணல் திருட்டை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரை, நடப்பது எங்க ஆட்சி, உன்னால ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று தி.மு.க. மணல் மாஃபியா மிரட்டியதோடு, இது மாதிரி சமூக வலைத்தளங்களில் பதிவு போடுபவர்களின் நிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியும் என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமைந்துள்ளது சுப்பையா குளம். இக்குளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் புதர்கள் மணிடியும், குப்பை கூலங்களுமாக காட்சியளித்தது. இதனால், இக்குளத்தின் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சுப்பையா குளத்தை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில், தி.மு.க. பிரமுகர் ஜெகன் என்பவர் அந்த கான்ட்ராக்டை எடுத்து குளத்தை தூர்வாரி வருகிறார்.
ஆனால், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்படும் மண், கரையை பலப்படுத்த பயன்படுத்தாமல், வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ஆகவே. அங்கு எடுக்கப்படும் மண்ணை அதே பகுதிக்கு பயன்படுத்தாமல், நாகர்கோவிலுக்கு வெளியே கொண்டு செல்வது ஏன் என்றும், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்றும், நாகர்கோவிலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஷாஜி சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, சமூக ஆர்வலர் ஷாஜியை செல்போனில் தொடர்பு கொண்ட ஜெகன், இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. நாங்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். என்னால்தான் குளம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, குளத்திலிருந்து மண்ணை வெளியே கொண்டு செல்வது குறித்து கேள்வி எழுப்பக் கூடாது. நான் தி.மு.க. சிறுபான்மை அணி அமைப்பாளர். தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அதோடு, மாநகராட்சி நிர்வாகம் எனக்கு துணை நிற்கிறது. உன்னால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
நிறைவாக, இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு போடுபவர்களின் நிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியும் என்று, தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த வி.ஏ.ஓ. கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தி இருக்கிறார். ஆகவே, வி.ஏ.ஓ.வுக்கு நேர்ந்தது போல் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் அரசுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும் நிலை இருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஷாஜி கூறியிருக்ரகிறார். சமூக ஆர்வலருக்கு ஆளும்கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.