நான் ஆர்.எஸ்.எஸ். தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தடாலடி!

நான் ஆர்.எஸ்.எஸ். தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தடாலடி!

Share it if you like it

கர்நாடகாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்.) தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், நானும் ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண்டன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தம்மையா கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி. பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளரான இவர், தமிழக மேலிட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் ஹெச்.டி.தம்மையா. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த தலைவரான இவர், நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வில் சீட் கேட்டார். ஆனால், கட்சித் தலைமை சீட் தரவில்லை. இதனால், பா.ஜ.க.வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் தம்மையா. இந்த சூழலில், தேர்தலில் சிக்மகளூர் தொகுதியில் சி.டி.ரவியை எதிர்த்து போட்டியிட்ட இவர், வெற்றியும் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார். அதேபோல, தேர்தல் வெற்றிக்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், சித்தபூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ப்ரியங்க் கார்கே, “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவை கர்நாடகாவில் அமைதியை சீர்குலைத்தால், அந்த அமைப்புகளை தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

எனினும், ப்ரியங்க் கார்கேவின் கருத்துக்கு கர்நாடக பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கட்டீல் பதிலடி கொடுத்திருந்தார். அதாவது, “பஜ்ரங்தளம் அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய காங்கிரஸ் முயற்சித்தால், அது எரித்து சாம்பலாகிவிடும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஆதரவாக தம்மையா கூறியிருக்கிறார். இதுகுறித்து தம்மையா கூறுகையில், “நான் 15 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் இருந்தேன். ஆனாலும், இன்றுவரை நான் ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் தொண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், சங்கத்தின் ஒழுக்கமான தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். நானும் மதச்சார்பற்றவன்தான். அனைத்து சமூகங்களையும் ஒன்றாக அழைத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தம்மையாவின் இந்த பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it