ஒடிஸாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 300 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நோக்கி பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. இந்த ரயில், இரவு 7 மணியளவில் ஒடிஸா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றபோது தடம் புரண்டது. இதில், இந்த ரயிலின் பெட்டிகள் அருகிலிருந்த மற்றொரு தண்டவாளத்தின் மீது கவிழ்ந்தன. அதேபோல, மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி, ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், தடம்புரண்டு கிடந்த பெங்களூரு – ஹவுரா ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் இந்த ரயிலின் பெட்டிகளும் கவிழ்ந்தன. மேலும், மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இச்சம்பவத்தில் 3 ரயில்களும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி கவிழ்ந்தன. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் ஒரே அழு குரல்களும், கதறலுமாக இருந்தது காண்போர் மனதை கலங்க வைத்தது. மேலும், விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் தண்டவாளங்களின் பக்கவாட்டில் சிதறிக் கிடந்தது கண்களை குளமாக்கின.
இவ்விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படும் நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. எனினும், பயணிகள் ரயில்களில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் நேற்று மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், இன்று மீட்புப் பணி துரித கதியில் நடந்து வருகிறது.