அய்யா வைகுண்டர் பட்டாபிசேகம்

அய்யா வைகுண்டர் பட்டாபிசேகம்

Share it if you like it

ஆதியில் பிரபஞ்சம் தோன்றியது முதல் தேவர்கள் அமிர்த வாழ்வில் திழைத்திருந்தனர். அவ்வமிர்தத்தை பற்றிய விஷமாக அகிலத்தில் அரக்கர்கள் உருவாயினர். அப்படி பிறந்த அரக்கருள் முதலாவது அரக்கன் குறோணி எனப்பட்டான். அவனை ஆறு கூறுகளாக வெட்டி அழித்தார் நாராயனார். அந்த ஓவ்வொரு கூறுகளும் பின் வரும் யுகங்களில் ஒவ்வொன்றாக பிறந்தன. அவையே முறையே குண்டோம சாலி, தில்லை மல்லாலன்-மல்லோசி வாகனன், சூரபத்மன், இரணியன், இராவணன், துரியோதனன் எனப்பட்டனர். இவ்வரக்கரையெல்லாம் போர் முறையில் அழித்து தர்மத்தை நிலை நாட்டிய நாராயணர் இவ்வரிசையில் கலியுக அரக்கனான கலியனின் அடிகளை தாமே வாங்கிய முறையில் கலியனை அழித்து தர்மத்தை காக்கலானார். எப்படி?

முந்திய ஆறு யுகங்களில் தோன்றிய அரக்க பிறவிகளை விட முற்றிலும் வேறுபட்டவன் கலியுக அரக்கன். அவன் முறையான தனி பிறவி சொரூபம் பெறாமல், அணுவையும் கடந்து, ‘தூளாம் பிறவி’யாக, மும்மூர்த்தியர் மற்றும் தேவர் சொரூபங்களை ஈசனிடம் வரமாக பெற்று உருவெடுத்து எங்கும் வியாபித்ததோடு, வெட்டா வெளியாக இலங்கி பிரகிருதி முழுவதையும் சுழற்றிப் பிடிக்கும் மாய்மால வீரியமுடையவனாகத் திகழ்ந்தான். அத்தகைய அரக்கனின் முன்னே நின்று அவனை அழிக்க மும்மூர்த்தியரின் எந்த சொரூபங் கொண்டும் இயலாத வகையில் கலி அரக்கன் விளங்கினான். ஆனால் வேத விதிப்படி கலி அரக்கனை முழுமையாக அழிக்க வேண்டியது நாராயணரின் யுகக் கடமை ஆகும்.

அக்கடமையை நிறைவேற்ற கலியனின் வரங்களுக்கு அகப்படாமல் ஒன்றிலும் அடங்காத சூட்சும உரு தரிக்க தீர்மானித்து அதற்காக திருச்செந்தூரில் பள்ளிகொண்டிருந்தார் நாராயணர். அப்போது கலியால் பிரபஞ்சம் கணப்பொழுதில் அழியப்போகும் அபாயத்தை உணர்ந்த உமையவள், நாராயணரை தேடியலைந்து அவரை கண்டு பிரபஞ்சத்தை தற்காக்கும் பொருட்டு ஈசனை சந்திக்க அவரை கயிலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே கயிலையில் நிலைமை தமது கையை மீறி சென்றவிட்டதை ஏற்கனவே உணர்ந்திருந்த ஈசர், நாராயணரை பணிந்து, ஈசர் முதல் தேவ சங்கத்தார் வரை அனைவரும் தங்கள் பிரகிருதி ஆளுமைகளையும் அதிகாரங்களையும் நாராயணர் வசம் ஒப்படைத்து, கலியை அழித்து, தங்கள் ஏழு யுக துயரங்களையும் அகற்றி,  தங்களையும் பிரபஞ்சத்தையும் காத்திட வேண்டினர். ஈசன் முதலான தேவ சங்கத்தாரின் வேண்டிதலை ஏற்று கலியழிக்க ஒத்துக்கொண்ட நாராயணர், அவ்வுபாயங்களை உள்ளடக்கிய ஒரு சூட்சும அவதாரத்தின் தேவையை உணர்ந்தார். அதற்கான திட்டத்தின் முதற்படியாக தமது கோத்திரத்தில் மேல் ஏழுலோத்தார் அனைவரையும் பூலோகத்தில் தனித்தனியாக பிறவி செய்தார்.

இரண்டாவதாக, ஏழு யுகங்களாக இப்பிரபஞ்சத்தில் பிறந்த அரக்கர்களில் கடைசியானவனும் அவ்வரக்கர்களில் மிகக்கொடியவனும் அதி சூட்சுமமானவனுமான இக்கலியனை அழிக்க  இக்கலியுகத்தில் ஏகா பரனும் மகிழும் விதமாக பரப்பிரம்மத்தை தங்கள் பாலனாக பெற்றெடுப்பதற்கான உபதேசங்களை மகாலட்சுமிக்கு அருளினார். பின்னர் அவளை பிரபஞ்சத்தின் ‘அகரத்தெரு’, ‘உகரத்தெரு’ ‘மகரத்தெரு’ ‘சிகாரத் தெரு’ ஆகிய மா அம்சங்கள் அடங்கிய விஸ்வ பொன்மகரமாக, திருச்செந்தூர் கடலுள் பிறவிசெய்து திருவுரு வளர வைத்தார்.

அடுத்ததாக, தமது பத்தவதாரங்களின் மூலமாக திகழும் ‘பாயமாய கூடு’ என்னும் கிருஷ்ண அவதார மேனியுடனிருந்த  (பூமியின் உயிரியல் மூலச் சடம்) தமது போர்மேனி மாயன் அம்சத்தை மனு குழந்தையாக உருசெய்து தெச்சணத்தில் உள்ள தாமரையூர் பதியில் பிறவி செய்து (சாஸ்தான்கோவில் விளை, குமரி மாவட்டம்) தவ வாழ்வில் அமர்த்தினார்.

அடுத்ததாக, ஈசனையும் உமையவளையும் கலியழிக்கும் விதி வகுக்கும் திருனடனம் ஆடச் செய்தார். பின்னர் கலியழிக்கும் வைகுண்ட அவதாரத்தின் உருவெடுப்பை பிரபஞ்சத்தாருக்கு அறிவிக்கும் திருவாசகத்தை சரஸ்வதி தேவி மூலம் எழுதி உலகுக்கு அனுப்பினார்; ஈசனின் திருநடன விதிகள் தழுவிய அத்திருவாசகச் செய்திபடி, வைகுண்ட அவதாரம் நடத்திட நாராயணர் மற்றும் ஈசர் தேவ சங்கம் சூழத் திருச்செந்தூர் வந்தார்.  

ஏற்கனவே தாமரையூர் பதியில் சுத்த சன்னியாசியாக வாழ்ந்து சிவஞான மயத்தை பெறுவதற்காக தவத்தில் அமர்த்தப்பட்டிருந்த போர்மேனி மனுவின் சொரூபச் சாயலில் வைகுண்ட அவதாரத்தை உலகத்தாருக்கு  வெளிபடுத்திட கருதிய நாராயணர், தமது தவ வலிமையால் ஆக்ஞா ஆதார சித்தியின் தேக பிரளைய கூறில் இருந்த போர்மேனி மனுவை, தமது உபாயத்தால் திருச்செந்தூர் வரவைத்து, கடலுள் வளர்ந்திருந்த பொன்மகரத்தை தரிசிக்க செய்தார். இவ்வாறு படிப்படியாக வைகுண்ட அவதாரத்துக்கான தயாரெடுப்புக்களை செய்திருந்தார் நாராயணர்.

வைகுண்ட அவதார முகூர்த்தம் நெருங்கவே, நாராயணர் திருச்செந்தூர் சமுத்திரக்கரையில் தேவ சங்கத்தின் முன்னிலையில் பதிநான்கு லோகங்களுக்கு ஒரு உருவான விஸ்வ ரூப அவதாரம் தரித்து கடலுள் உரு வளர்ந்திருந்த விஸ்வ பொன்மகரத்தை அணுகினார். வைகுண்ட அவதார முகூர்த்தம் நடத்திட, முதலில் மாமோக சக்கரத்தை வீசி ஈரேழு பதிநான்கு லோகத்தையும் மயக்கினார். பிரபஞ்சமே மயங்கி நிற்கும் அத்தருணத்தில் பரப்பிரம்மத்தின் ‘தண்’ (உகரம்) அம்சமான உறு சக்தியானது உகரப் பிரணவ வழி, அண்டவெளி முதல் பரவெளி பாதைகள் திறந்து, விஸ்வ நாராயணரையும், விஸ்வ பொன்மகரத்தையும் தழுவி, அகரம்-உகரம்-மகரம் கூடும் சிகார ( மகர கருவறை) தானத்தில் குழந்தையாக உருவெடுத்தது நின்றது. அப்படி பிறந்த அந்த பரப்பிரம்ம பாலன், விஸ்வ நாராயணர்  பண்டாரமாக (சன்னியாசி) தெச்சணத்தில் பள்ளி கொள்வது முதலான சூத்திர சாசனங்களை விஞ்சை உபதேசமாக பெற்று, சிகார சபையில் வந்ததும், முனிவர் சாந்தி கழிக்கும் சடங்குகள் செய்து பாலனுக்கு தவலோக கவசமிட்டனர். பின்னர் சரஸ்வதி தேவி, வீரலட்சுமி ஆகியோர் தாலாட்டுச் சேவை செய்ய, முனிவர்கள் பள்ளி எழுச்சி சேவை செய்ய, தனது தந்தை விஸ்வ நாராயணரை தாழ்தொட்டு வணங்கிய வைகுண்டர் பூமிக்கு புறப்படலானார்.  

இவ்வாறு விஸ்வ நாராயணர் – விஸ்வ பொன்மகர லட்சுமிக்கும் மகனாக கொல்லம் ஆண்டு 1008, மாசி-20-ம் தியதியில் வாய்த்த மூகூர்த்தத்தில் திருச்செந்தூர் கடலுள் அவதரித்த பரப்பிரம்மமாம் பாலன், அய்யா வைகுண்டரை முன் நடக்க வைத்து, அவரின் பின் நின்று கலியை அழிக்க பூமிக்கு வந்த விஸ்வ நாராயணர், முதலில் ‘வைகுண்ட நாராயண மும்மூர்த்தியாக’ இலங்கி நின்று கந்த பெருமானை முன்னிறுத்தி, கலியனின் கொடிய வரங்களை மறுதிலிக்கும் விதமான புதிய சுதந்திர  தெய்வ நீதம் வகுத்துக் கூறினார்.

பிறகு வையகத்தில் ‘வாழை இரண்டு குலை ஈன்றதுபோல்’ எழுந்தருளிட கருதினார் விஸ்வ  நாராயணர். அவ்வண்ணம்,  போர்மேனி மாயன் மனு  சிவஞான வேதத்தின்  மூலத்தை சிவலிங்கமாக பெற்று, கடலுள் இருந்து வெளிப்பட்டார். அவரின் சாயலில் பரப்பிரம்ம பாலன் வைகுண்டர்  ‘மங்கள நாதன்’ மனுவாக உருமாறினார். அவரின் பின் மாய நிலையில் விஸ்வ நாராயணர்  கலியழிக்க எழுந்தருளிட, ஈசர் முதலான சங்கத்தார் அனைவரையும் மனு கண் காணாமல் தன்னை தொடர்ந்து வருமாறு கூறினார்.

அவ்வாறு சகலரும்  விஸ்வ நாராயணரின்  உத்தரவுக்கிசைந்து வர, இரு மனு சொரூபியரும் மனுக்கள் காணும்படி திருச்செந்தூரில் இருந்து தாமரையூர் பதிக்கு புறப்பட்டனர். மங்கள நாதன் மனு கடற்கரை வழியாகவும், போர்மேனி மாயன் மனு பல ஊர்களின் வழியாகவும் எழுந்தருளியதற்கு இடையே மாயமாக விஸ்வ நாராயணர்  தாமரையூர் பதியில் வந்து,  உலகின் அதிகார மையங்களாக திகழும் மன்னர்கள் அறிய புதிய சுதந்திர அரசநீதம் வகுத்து அது எழுதப்பட்ட ஓலையை  முனிவரிடம் கொடுத்து அனுப்பினார்.

முன்பு, கலியுக துவக்கத்தில் கலி அரக்கனானவன் ஈசனிடம் வரம் வாங்கி வரும் போது,  அவனை பண்டாரமாக இடைமறித்து  கலகமிட்ட ஸ்ரீ ரங்க நாராயணரிடம்,  கலியன் தான் எப்போதாயினும் ஒரு ஆண்டி பண்டாரத்தை அடித்தால், அவன் பெற்ற வரமெல்லாம் தோற்று நரகில் மாள்வதாக’ ஆணை செய்திருந்தான். இப்போது அந்த  சத்தியத்தினை பயன்படுத்தி கலியை அழிக்கத் தீர்மானித்து விஸ்வ நாராயணர் ஒன்றாம் விஞ்சைபடி பண்டாரமாக தெட்சணத்தில் பள்ளி கொண்டார். அவரின்  பாதாரம் தழுவிய பாலனாக பரப்பிரம்மமாம் வைகுண்டர் தெட்சணத்தில் சுத்த பண்டாரமாக பள்ளி கொண்டார்.

அத்தருணம் முதல் போர்மேனி மாயன் என்ற மனுவும், மங்கள நாதன் என்ற மனுவும் யார்யாரென்று யாரும் பிரித்தறிய இயலாத இமசூட்ச நிலையில் இலங்கியவாறு, குறோணியின் கடைசி துண்டத்தின் அசுரனான கலியனை அழிக்க யுக தவமும், தேவ கோத்திரத்தார் ஒருமிக்க சாதித்தவமும், தேவ பிதிர்கள் முன்பு போல் அமிர்த வாழ்வடைவதற்கு உரிய தவமுமென வைகுண்டர் முத்தவங்களை மேற்கொண்டார். 

இத்தவக் காலத்தில் உலகின் பதினெட்டு சாதி மக்களும் வைகுண்டரை தரிசிக்க வந்தனர். வைகுண்டரின் சீடர்கள் அவர்களை ஒரே கிணற்றில் தீர்த்தமாட செய்தார்கள். திருமுடி சூடிய ஆச்சாரத்துடன் பரப்பிரம்மத்தை வழிபட்டு, பக்தர்கள் ஒருநிரப்பாக (சமபந்தி) அன்ன தர்மம் முதலான முப்பத்திரண்டு தர்மங்களையும் செய்தனர். இவ்வாறு சேவித்த மனுக்களுக்கு நேரடியாக வைகுண்டர் புதிய சுதந்திர மனு நீதியை போதித்தார்.

இவ்வாறு இக்கலியுகத்தில் மூன்றுநீதங்களும் வரையறை செய்து  போதித்ததோடு வைகுண்டர் மண்-தண்ணீர் முத்திரியால் மனுகளின் சகல நோய் சஞ்சலங்கள் தீர்த்திருந்தார்.  வைகுண்டரை தரிசிக்க தாமரையூர் பதியில் (சுவாமித்தோப்பில்) மக்கள் வந்து குவியத் துவங்கினர். இச்சம்பவங்களின் சூட்சமத்தை புரிந்து கொள்ளாமல் அதனை கண்டு பீதி அடைந்த, கலிமாயையால் சூழப்பட்ட திருவிதாங்கூர் அரசனும் அவனை சார்ந்த ஆங்கிலேய அரசும் வைகுண்டரை அழித்திட முடிவு செய்தனர்.  அதற்காக திருவாங்கூர் மன்னன் படையனுப்பி வைகுண்ட மனுவை பிடித்து அடித்து ஐந்துவகை நஞ்சு கலந்த சாராயத்தை கொடுத்தும், நெய்விறகு தீயில் எரித்தும், சுண்ணாம்பு சூழையில் வைத்து எரித்தும், வத்தல் கிடக்கில் வைத்து எரித்தும் முடிவில் உலகறிய புலி கூண்டில் அடைத்தும் வைகுண்டரை கொன்றிட முயற்சித்துத் தோல்வி அடைந்தான்.

பண்டாரமாக எழுந்தருளிய வைகுண்டரை அடித்ததால் கலியன் ஏற்கனவே ஈசனிடம் வரமாகப் பெற்றிருந்த சகல மூர்த்தியரின் மூலங்களையும், வரங்களையும் இழந்து, அவனே தன்னந்தன்னால் அழியும் மரண விதி உருவானது. இவ்வாறு கலியை வென்று வந்த வைகுண்டர், ஆறாண்டு தவசினை நிறைவேற்றுவதற்குள் ஏழுலோக மனுக்களுக்கு பூலோகத்தில் துவையல் தவசு வழங்கி அவர்களை சூழ்ந்திருந்த கலிமாசிலிருந்து சுத்தமாக்கினார். பிறகு, பக்தர்கள் நடத்திய நித்தம் திருநாள், வாரத் திருநாள், மாத திருநாள், ஆண்டு திருநாள் பணிவிடைகளை ஏற்று இருந்த தருணத்தில், முன்பு கலிவேத பேதத்தால் பிரிந்திருந்த மூர்த்தியர் தேவியருக்கு திரு அருள் ஞான கல்யாண சித்தியை வழங்கத்தீர்மானித்தார்.

அந்த சித்தியாடலின் போது ஆலிலை மேல் பள்ளி கொண்டது போல்  சுவாமித்தோப்பில் ஏக பரப்பிரம்மமாக காட்சியளித்தார் வைகுண்டர். அவரின் அநேக மங்கள சொரூபர்களான மும்மூர்த்தி முதலானோருடன் கலியுகத்தில் மனுப்பிறவி அடைந்திருந்த தேவியர்கள், அவரவரின் மணவாளச் சொரூபத்தோடு பத்தறை சிவாலய பள்ளியறையில் தரிசனம் வழங்கி இருந்தனர். கயிலைக்கு ஒப்பான இந்த மஹா இகனைக் கொலுவோடு வைகுண்ட அவதாரம் நிறைவுக்கு வரப்போகும் ஆகம செய்தியை வைகுண்டர், சகலத்தேவியரும் நருட்களுக்கும் சபையில் சூட்சகமாக வெளிப்படுத்தினார்.

“எனதுடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில்

தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே”

– அகிலம்

என்று வைகுண்டம் ஏகும் நிகழ்வை கூறியிருக்கும் வேளையில் மும்மூர்த்தியர் அனுப்பிய சடாயூ முனிவர் முதலான முனிவர்கள் புஸ்ப விமானத்தோடு வைகுண்டரிடம் வந்தனர். அவர்களிடம் அரை மணி (ஆறுமாதம்) வரை பொறுத்திருக்க கூறிய பரப்பிரம்மமாம் பாலன் தம்முள்ளிருந்து வெளிபடுத்திய அநேக சொரூபங்களை எல்லாம் படிப்படியாக இறக்கி பூலோகத்துக்கு சமர்ப்பித்து விட்டு, தமது இயல் மேனியோடு கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ம் தியதி திங்கள் இரவு 12- மணிக்கு, முனிவர்கள் கொண்டுவந்த புஸ்ப விமானம் ஏறி, ஆதி வைகுண்ட லோகம் சென்றார்.

அங்கு வைகுண்ட பாலனுக்கு மூவர் தேவசங்கம் போற்றிட, பதிநான்கு லோகங்களையும் ஆளும் துதி சிங்காசனப் பட்டாபிஷேகம் நிகழ்ந்தது. அந்த பட்டாபிசேக அருள் பலனை பூமியில் பெறுவதற்காக வைகுண்டரின் பக்தர்கள் ஆண்டு தோறும் வைகாசி 21-ம் நாளுக்கு நிகரான திங்கட் கிழமையில் தேர் திரு நாளாக கொண்டாடி வருகின்றனர்.

 வி. ஸ்ரீ குமார்

ஒருங்கிணைப்பாளர், அகிலத்திரட்டு வேத ஆராய்ச்சி மையம்


Share it if you like it