இந்தியாவுடனான 3 போர்கள் மூலம் பாடம் கற்றுக் கொண்டு விட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் சரண்டர்!

இந்தியாவுடனான 3 போர்கள் மூலம் பாடம் கற்றுக் கொண்டு விட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் சரண்டர்!

Share it if you like it

இந்தியாவுடனான 3 போர்கள் மூலம் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டு விட்டோம். நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். இதற்கு பிரதமர் மோடி சம்மதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான், தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் இருக்கிறது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பாகிஸ்தான் மக்கள் பரிதவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முழுவதும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கோதுமை மாவுக்காக பொதுமக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. தவிர, கோதுமை மாவுக்கான மோதலில் 5 பேர் பலியான சம்பவமும் அரங்கேறியது.

இதுகுறித்து பாகிஸ்தானின் ஜே.கே.ஜி.பி.எல் கட்சியின் தலைவர் பேராசிரியர் சஜ்ஜத் ராஜா தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டு, “இது மோட்டார் சைக்கிள் பேரணி அல்ல. பாகிஸ்தானில் மக்கள் கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் லாரியை, வெறும் ஒரு பை கோதுமையாவது வாங்கலாம் என்ற நம்பிக்கையில் துரத்துகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானியராக இருக்காதது அதிர்ஷ்டம். நமக்கு எதிர்காலம் உண்டா?” என பதிவிட்டிருந்தார். மேலும், பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை நிபுணர் ஷஜாத் சவுத்ரி, அந்நாட்டின் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகையில், இந்தியா உலகளவில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. இதற்கு பாரத பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையும், ராஜதந்திரமும்தான் காரணம் என்று புகழ்ந்து தள்ளி இருந்தார்.

இந்த சூழலில், பாகிஸ்தான் நிர்வாக சேவையின் (பி.ஏ.எஸ்.) தகுதிக்கான அதிகாரிகளின் தேர்ச்சி விழாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “அணுசக்தி நாடு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், யாசகம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது. கடன் கேட்பது மிகவும் சங்கடமாக இருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டுக் கடன்களை நாடுவது சரியான தீர்வாகாது. ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பாகிஸ்தானுக்கு மேலும் 1 பில்லியன் டாலர் கடன் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், அல் அரேபியா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சம்மதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்னையாக இருந்துவரும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும். இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்ற முடியும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்தியா உலகுக்கு அறிவிக்க வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். ஒன்றாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். நாட்டில் எந்தளவுக்கு அமைதி இருக்கிறதோ அந்த அளவுக்கே முன்னேற்றம் இருக்கும்.

இரு நாடுகளும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நேரமும் பணமும்தான் வீணாகும். இந்தியாவுடன் நாங்கள் 3 போர்களை சந்தித்துவிட்டோம். இந்த போர்கள் பாகிஸ்தானியர்களுக்கு கூடுதலான துன்பத்தையும், வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையுமே அளித்திருக்கின்றன. நாங்கள் எங்களுக்கான பாடத்தை தற்போது கற்றுக்கொண்டுவிட்டோம். எனவே, அமைதியை விரும்புகிறோம். அமைதியாக வாழ்வதும், முன்னேறுவதும் அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நேரத்தையும் வளங்களையும் வீணாக்குவதும் நம் கையில்தான் உள்ளது. வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளுக்காக எங்கள் வளங்களை வீணடிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்திருக்கிறார். இந்தியாவிடம் பாகிஸ்தான் பிரதமர் சரண்டராகி இருப்பது பாரத பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையையும், வலிமையும் காட்டுவதாக இருக்கிறது என்று நாட்டு மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.


Share it if you like it