கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி வீட்டில் சோதனையிடச் சென்ற அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்தியது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்திருக்கிறது.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக்கின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், அசோக்கின் வீட்டுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் காயமடைந்த அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழக போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் மீது வழக்குப் பதியாத போலீஸார், தாக்கப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து ஷாக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, கரூரில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி, வழக்கறிஞர் ராமசந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தி.மு.க.வினரால் திட்டமிடப்பட்டது என்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பான ஆதாரம் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, டாஸ்மாக் ஒப்பந்ததாரரான கொங்குமெஸ் சுப்ரமணி என்பவர், செல்வராஜ் என்பவரிடம், கும்பலாகச் சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை பறித்து செல்லுமாறு கூறிய ஆடியோ பதிவு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்திருக்கிறது. இந்த ஆடியோவை போலீஸாரிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.