ஆவின் பாலகம் அமைக்க லஞ்சம்: தி.மு.க. நிர்வாகி லைவ் வீடியோ வைரல்!

ஆவின் பாலகம் அமைக்க லஞ்சம்: தி.மு.க. நிர்வாகி லைவ் வீடியோ வைரல்!

Share it if you like it

சேலத்தில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி, 2.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மீது புகார் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேண்டீன் நடத்தி வருகிறார். இந்த சூழலில், அதே மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த சூழலில், சேலம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராக இருக்கும் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன், ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வாங்கித் தருவதாகவும், தனக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறும் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து, குணசேகரன் முன்பணமாக 2.50 லட்சம் ரூபாயை அன்னதானப்பட்டிக்குச் சென்று சந்திரசேகரனிடம் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆவின் பாலகம் அமைக்கும் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், சந்திரசேகரன் அனுமதி பெற்றுத் தரவில்லை. எனவே, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார் குணசேகரன். அதற்கு பணத்தை தர மறுத்திருக்கிறார் சந்திரசேகரன். இதைத் தொடர்ந்து, அன்னதானப்பட்டி போலீஸில் சந்திரசேகரன் மீது புகார் செய்தார் குணசேகரன். எனினும், போலீஸார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லையாம்.

சந்திரசேகரன் மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளராக இருப்பதாலும், அவரது தந்தை ஜி.கே.சுபாஷ் மாவட்ட தி.மு.க. அமைப்பாளராக இருப்பதாலும் சந்திரசேகரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், சந்திரசேகரன் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Share it if you like it