மழைநீர் வடிகால் பணி மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை, அடிச்சு வாய ஒடச்சுருவேன் என்று தி.மு.க. கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பகுதியான வேங்கைவாசல் சாலையில் மழை காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கும். ஆகவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு இடையூறாக வி.ஜி.கே. என்கிற தனியார் கட்டுமான நிறுவனம் சாலையோரம் மணல், ஜல்லி, ஹாலோபிளாக் கற்களை கொட்டி வைத்திருந்தது. எனவே, வேங்கைவாசல் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மாணிக்கம் (ஆர்.ஐ.), மேற்படி மணல், கற்களை லாரியை வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
இதைக்கண்ட வி.ஜி.கே. கட்டுமான நிறுவனத்தினர், தாம்பரம் மாநகராட்சி 33-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுரேஷுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கவுன்சிலர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மாணிக்கத்தை ‘வேலையை நிறுத்துடா, என்னடா பண்ணுவ, அடிச்சி வாயை ஒடைச்சிடுவேன்’ என்றும், தகாத வார்த்தைகளாலும் ஏகவசனத்தில் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அதேசமயம், ஆர்.ஐ. மாணிக்கமோ, ஆளும்கட்சி கவுன்சிலர் என்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் மிரண்டு போய், அத்தனை ஆபாச பேச்சுகளையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்.
இதன் பிறகு, அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட பலரும், தி.மு.க.வினரின் அராஜக செயலை கண்டித்து வருகின்றனர். மேலும், அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுக்கும் தி.மு.க. கவுன்சிலர் சுரேஷ், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு திட்டியதன் நோக்கம் என்ன? எதற்காக சம்மந்தமில்லாமல் வந்து தலையிட்டார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.