தற்காலிக ஆசிரியர்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் குட்டு!

தற்காலிக ஆசிரியர்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் குட்டு!

Share it if you like it

தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு என்பது மிகவும் ஆபத்தானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழக அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை முதல் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வரையிலான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆகவே, இப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டு கடந்த 23-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா சென்னை உயர் நீதிமன்ற மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர், அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்குத் தேர்வாகவில்லை.

இந்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப அரசு திட்டமிட்டு கடந்த 23-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இல்லை. இதனால், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்குத் தேவையான நபர்களை பணியில் நியமித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக, தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், “முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தகுதியற்ற தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது” என்றார். இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அரசுத் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.


Share it if you like it