100-வது நாளை நோக்கி தி.மலை போராட்டம்!

100-வது நாளை நோக்கி தி.மலை போராட்டம்!

Share it if you like it

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து நடந்து வரும் போராட்டம் 100-வது நாளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க செங்கம் தொகுயில் இருக்கும் பாலியப்பட்டு கிராமத்தை தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அக்கிராமத்தைச் சுற்றி இருக்கும் 1,200 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மலை மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அதன்படி, சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விளை நிலங்களை அழித்து சிப்காட் வேண்டாம் என்று பதாகை ஏந்தியபடி நடந்து வரும் இப்போராட்டம்தான், 100-வது நாளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதில், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அ.தி.மு.க. ஆட்சியில் சேலம் டூ சென்னை 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., விவசாய நிலத்தை அழித்து சாலை வேண்டாம் என்று சொல்லி, பொதுமக்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் குதிக்க வைத்தது. மேலும், சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மறைந்திருக்கும் போலி போராளிகளான பியூஸ் மானுஷ் போன்றவர்களும் இந்த போராட்டத்தை வைரலாக்கி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தை தமிழக மீடியாக்களும் ஊதி பெரிதாக்கின. இதனால், 8 வழிச்சாலைத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், அப்பாவி கிராம மக்களின் வாழ்வாதாரத்தை படுகுழியில் தள்ளும் வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் வீடுகளை சிதைத்து, ஏரி, குளங்கள் போன்ற நீராதாரங்களை நிர்மூலமாக்கி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்திருக்கிறது. இதை எதிர்த்துத்தான் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், இதை எந்தவொரு ஊடகங்களும் காட்சிப்படுத்தாமல், தி.மு.க. அரசுக்கு ஆதரவாக ஊதுகுழல் வாசித்து வருகின்றன. ஆனால், இருட்டடிப்பு செய்யப்படும் இப்போராட்டத்தை நெட்டிசன்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டனர்.


Share it if you like it