அமைச்சர் சாமிநாதன் பங்கேற்ற விழாவில் தி.மு.க.வினர் மின்சாரத்தை திருடிய சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் நாமக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு 678 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவிற்காக, பொம்மகுட்டை மேடு என்கிற இடத்தின் அருகே பொதுப் பணித்துறை சார்பில் பிரம்மாண்ட விழா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக அருகில் இருந்த மின்வாரியத்திற்குச் சொந்தமான மின் கம்பத்திலிருந்து நேரடியாக ஒயரை மாட்டி மின்சாரம் திருடப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமைச்சர் சாமிநாதன் பங்கேற்ற விழாவிலும் மின்சாரம் திருடப்பட்டிருக்கிறது. அதாவது, திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாநகரில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இது முழுநேர ரேஷன் கடையாக தகுதி உயர்த்தப்பட்டது. இந்த ரேஷன் கடையின் திறப்பு விழா நடந்தது. இதில், அமைச்சர் சாமிநாதன் கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதற்காக, மைக் செட், மின் அலங்கார விளக்குகள் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்குத் தேவையான மின்சாரம், அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்த பெட்டியிலிருந்து திருடப்பட்டது. இது தொடர்பாக வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வின் திருட்டுத்தனத்தை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.