இன்று ஆசிரியர் தினம் – குரு உற்சவ நாளில் குருமார்கள் பாதம் பணிந்து நன்றியோடு வணங்குவோம்

இன்று ஆசிரியர் தினம் – குரு உற்சவ நாளில் குருமார்கள் பாதம் பணிந்து நன்றியோடு வணங்குவோம்

Share it if you like it

உலகில் உள்ள ஒவ்வொரு மாணவரின் வாழ்வை செதுக்கும் உலக சிற்பிகள் ஆசிரியர்கள். குழந்தைகளின் வாழ்வில் பெற்றோர்களுக்கு அடுத்த இடத்தில் பங்களிப்பு வழங்கும் அவர்கள் வாழ்வில் பெரும் தாக்கத்தையும் பிரதிபலிப்பையும் தரக்கூடியவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான் அவர்களை மாதா பிதா குரு தெய்வம் என்ற இடத்தில் பெற்றோர்களுக்கும் தெய்வத்திற்கும் இடையில் வைத்து கௌரவப்படுத்தியது பாரதத்தின் சனாதன தர்மம்.

உயிர் கொடுத்தவள் மாதா. மாதா அறிமுகப்படுத்துவதே பிதா. இருவரும் இணைந்து தன் குழந்தையை ஒரு குருவிடத்தில் ஒப்படைத்து இவனை சகல வித்தைகளிலும் தேர்ச்சி பெறச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளோடு நம்பி ஒப்படைக்கும் தகுநிலைக்கு முழுமையான அர்ப்பணிப்போடு செயல்படும் ஒரு உன்னதமான வழிகாட்டியே ஆசிரியர். ஒரு குழந்தையை கலைகளை கற்பிக்க வழிகாட்டுபவன் வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளுக்கு அந்த குழந்தை பயணிக்கும் போது ஒரு மாணவனாக அவனை தகுநிலைப்படுத்தி அவனது கையைப் பிடித்து ஒவ்வொரு கட்டத்திற்கும் அழைத்துச் செல்லும் ஆச்சாரியன் ஆசிரியர்.

இந்த உலகில் வரலாறு நெடுகிலும் பெரும் சாதனையை நிகழ்த்தியவர்கள் அத்தனை பேரும் ஒரு தலைசிறந்த குருவை வரமாக பெற்றவர்களாகவே இருப்பார்கள். இது பாரதத்தில் மட்டுமல்ல பாரதத்தின் வெளியே இருக்கும் உலக வரலாற்றிலும் நீங்கள் தேடும் இந்த உண்மை நிச்சயம் புலப்படும். அந்த வகையில் எழுத்தறிவித்தவன் இறைவன் என்னும் இந்திய தர்மத்தை பெரும்பாலான உலக நாடுகள் பின்பற்றி வருகிறது என்பதே உண்மை.

மகாபாரதத்தில் தான் ஈன்ற மகனான அஸ்வத்தாமனுக்கு கொடுக்கும் அக்கறை முன்னுரிமையை காட்டிலும் தன் பிரதான சிஷ்யனான அர்ஜுனனுக்கு துரோணர் அதிக அளவில் கொடுத்தார். காரணம் அர்ஜுனனின் வீரம் விவேகம் அவனிடத்தில் இருந்த தர்மம் அது எதிர்காலத்தில் தேசத்தை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை. அதன் காரணமாக அவனை அனைத்திலும் உச்சம் பெற்ற ஒரு மாவீரனாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற சமூக அக்கறை. தேசிய சிந்தனை துரோணர் என்ற சத்திய கீர்த்தியை குருவாகப் பெற்று அர்ஜுனன் என்ற மாவீரனை உலகிற்கு வழங்கியது.

மாணவர்களின் கல்வி கற்கும் திறனின் அவர்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியலில் வேறுபாடுகள் இருக்கலாம். அவர்களின் வேலை வாய்ப்பு வருமானம் வாழ்க்கை தரம் இவற்றில் எல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் அனைவரிடத்திலும் மனதளவில் பெருமிதமாக இருக்கும் ஒரு உணர்வு எனில் அது அவர்களின் கல்வி கற்ற காலமும் அந்தக் காலத்தில் அனைத்து மாணவர்களையும் சரிசமமாக வழி நடத்திய ஆசிரியர்களை பற்றிய உணர்வுமே அது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மாணவர்கள் எதிர்காலத்தில் சொந்த காலில் நிற்க வேண்டும் அவர்களின் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் நல்ல சுறுசுறுப்பும் அதே ஆர்வம் உள்ள மாணவர்களை தட்டிக் கொடுத்து இன்னும் முன்னேற்றுவது சராசரியான மாணவர்களை உன்னால் முடியும் இன்னும் முயற்சி செய் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று நம்பிக்கை கொடுத்து வழி நடத்துவது. பின் தங்கிய மாணவர்களை கூட கொஞ்சம் கூடுதலாக பயிற்சி எடு நான் உனக்கு எல்லா உதவிகளையும் செய்கிறேன் வழிகாட்டுகிறேன் நீயும் அதற்குரிய உழைப்பு முயற்சியை கொடுத்தால் நிச்சயம் நீயும் கல்வியில் கரை காண முடியும் என்ற நம்பிக்கை கொடுத்து இறுதி வரை அந்த மாணவனையும் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்காவது அனுப்பி வைக்க வேண்டும் என்ற முனைப்பு காட்டுவது என்று ஒவ்வொருவரின் தனி நலனிலும் அக்கறை காட்டிய அந்த ஆசிரியரை பற்றிய நினைவுகள் பொக்கிஷமாக மனதில் இருக்கும்.

அதே நேரத்தில் எனக்கு கல்வியே வேண்டாம் என்று கல்வி நிறுவனங்களை துறந்து விட்டு வந்த மாணவர்களிடமும் அல்லது படிப்பு வாசனையே எட்டாத மாணவர்களிடமும் கொஞ்சம் மனம் விட்டு பேசிப் பாருங்கள் ஏதேனும் ஒரு ஆசிரியனோடு ஏற்பட்ட மனக்கசப்பு அல்லது அவர்களின் மூலமாக ஏற்பட்ட கசப்பான அனுபவமே அவர்களின் கல்விக்கும் கல்வி வளாகத்திற்கும் இடையேயான பாலம் அறுபட்டு கல்வியே வேண்டாம் என்று முடிவு எடுக்கும் நிலைக்கு வந்திருப்பார்கள் .அந்த வகையில் ஆசிரியர் அமைவது என்பது ஒரு வரம் தான்.

அதேபோல ஆசிரியரின் கண்டிப்பும் தண்டிப்பும் தன்னை சிறுமைப்படுத்தும் கொடுமைப்படுத்தும் எண்ணம் கொண்டதில்லை. தன்னுடைய தவறுகளை உணரச் செய்து தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து தகுநிலைப்படுத்தும் ஒரு வழிமுறைதான் என்பதை உணர்ந்து ஆசிரியனிடம் முழுமையாக கட்டுப்பட்டு பணிந்து வணங்கும் மாணவர்கள் நிச்சயம் எதிர்காலத்தில் பரிமளித்து விடுவார்கள். ஆனால் நான் மாதாந்திரம் வருடாந்திரம் கட்டணம் செலுத்துகிறேன் என் கட்டணத்திலிருந்து ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு என்னை கண்டிக்கும் அதிகாரம் உரிமை எங்கிருந்து வந்தது. என் பெற்றோர் கூட என்னை இப்படி கேட்டதில்லையே என்று தனி மனித சுதந்திரம் சுய கௌரவம் பாசம் மாணவர்களும் பெற்றோர்களும் அன்றைக்கு இழப்பது ஆசிரியரை மட்டும்தான். ஆனால் பின்னாலில் இழப்பது ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் என்பதை காலம் கடந்த பிறகு அவர்கள் உணர்வார்கள். ஆனாலும் அதில் எந்த பிரயோஜனமும் இருக்காது.

இந்தியாவில் ஒரு உயர்ந்த குடியரசு தலைவர் பதவியில் இருந்தவர் அரசு முறை சுற்றுப்பயணமாக ஒரு அரபு தேசத்திற்கு போயிருக்கிறார். அந்த அரபு தேசத்தின் மன்னர் அந்த இந்திய குடியரசு தலைவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். அந்த தேசத்தின் வழக்கத்தின்படி வரலாற்றில் எந்த ஒரு விருந்தினரையும் வரவேற்க மன்னர் விமான நிலையம் போன வரலாறு கிடையாது.

விமானம் தரையிறங்கியது இந்தியாவின் உயர்ந்த ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவர் இறங்கி நடந்து வருகிறார். அரபு நாட்டு மன்னர் ஓடி சென்று அவரை வரவேற்று வணங்கி ஆசி கோறுகிறார். இந்தியா குடியரசு தலைவரும் அவரை அரவணைத்து மகிழ்கிறார் .இருவரும் புறப்பட்டுச் செல்ல வேண்டும் ஆனால் ஜனாதிபதியை அழைத்து போவதற்கு என்று வந்த காரில் அவரை ஏறி அமர வைத்த பிறகு அந்த மன்னர் அந்த காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அந்த காரை அவராகவே ஓட்டிச் சென்று விருந்தினர் மாளிகை வரையிலும் காரை ஓட்டிச் சென்று அந்த குடியரசு தலைவரை கௌரவப்படுத்தினார். உலகமே அதிசயத்து பார்த்த இந்த நிகழ்வின் பின்னணி பற்றிய செய்தி பின்னர் வெளியாகிறது.

அந்த அரபு நாட்டு மன்னர் தனது கல்லூரி மற்றும் உயர் கல்வி பயில இந்தியா வந்திருந்தபோது புனேயில் தங்கி இருந்து இந்திய கல்வி நிறுவனம் ஒன்றில் படித்துக் கொண்டிருந்த சமயம் அது அப்போது அவருக்கு ஆசிரியராக இருந்தவர் வேறு ஒரு நாட்டு குடிமகன் என்றாலும் அந்த நாட்டின் அரச குடும்பத்தின் வழி வந்தவன் எதிர்காலத்தில் நாட்டை வழி நடத்தும் தலைவன் என்பதால் அவன் விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டி அவனுக்காக அதிக நேரம் ஒதுக்கி இருக்கிறார். அவன் பாடத்தில் இருக்கும் சந்தேகத்தை கடந்து இந்தியாவின் வரலாறு பாரம்பரியம் ஆன்மிகம் என்று அவன் கேட்ட அத்தனை விஷயங்களுக்கும் உரிய விளக்கம் கொடுத்து அவனை ஒரு தேர்ந்த வழிகாட்டியாக மாற்றி இருந்தார். அதுதான் பின்னாளில் அவர் தேசத்தின் மன்னராக மக்களின் அன்பு நம்பிக்கையையும் அரசு எந்திரம் ஆட்சியாளர்களின் மரியாதையையும் தக்க வைத்து ஒரு வெற்றிகரமான மன்னராக பரிமளிக்க முடிந்ததாம். .

தான் கல்வி பயின்ற காலத்தில் தனக்கு கல்லூரியில் பாடம் கற்பித்த ஆசிரியர் தான் பின்னாளில் உயர்ந்து இந்தியாவின் குடியரசு தலைவராக வந்திருக்கிறார். இதோ இன்று அவர் அரசு முறை பயணமாக என் தேசத்திற்கு வந்திருக்கிறார் .நான் இந்த தேசத்தில் மன்னராக இருக்கிறேன். நான் என்ற மன்னராக இருந்தாலும் என் ஆசிரியருக்கு என்றுமே நான் சிஷ்யன் தான் எனக்கு அவர் என்றைக்குமே வணக்கத்திற்குரிய குரு தான். அவருக்கு கார் ஓட்டி சேவை செய்தது என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணம் என்று அவர் குறிப்பிட்டது ம் இப்படிப்பட்ட மாணவர்களை பெறுவது உண்மையில் ஆசிரியர்களுக்கு பெரும் வரம் என்று அந்த தலைவர் நிகழ்ச்சியோடு குறிப்பிட்டது இந்திய பாரதத்தின் உயர்ந்த பண்பாட்டிற்கும் குரு ஸ்தானம் எத்தகைய மகத்துவம் வாய்ந்தது என்பதற்கான அடையாளம் அதை அந்நிய தேசத்திலிருந்து வந்து இங்கு தங்கி படித்துப் போனவர்கள் கூட உள்வாங்கிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாக்க முடியும் எனும் போது இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் அந்த குரு ஸ்தானத்தை மதிக்க தவறுவதும் அவமதிப்பதும் ஏற்புடையதல்ல.

குரு கடாட்சம் தெய்வ கடாக்ஷம் என்பார்கள் அந்த குருவின் மனம் பொன் பொருள் வேண்டுவதில்லை. மண்மனை தட்சனை கேட்பதில்லை. அந்த குருவின் மனம் வேண்டுவதெல்லாம் ஒன்றே என் மாணவன் கல்வி தகுதி திறமையில் குறைபட்டவனாக இருக்கலாம் ஆனால் தனி மனித ஒழுக்கம் கண்ணியம் சமூக அக்கறை தேச சிந்தனையில் அப்பழுக்கில்லாதவன் என்ற நற்சான்றிதழை பெற வேண்டும். அதுவே அவனுக்கு கற்பித்த எனக்கு பெருமையாக இருக்கும் என்பதே அவரின் முதல் விஷயம் இரண்டாவது எதிர்பார்ப்பு என்னிடம் படித்த மாணவன் நான் கற்றுக் கொடுத்த விஷயங்களை கிரகித்து அதனின் அடுத்த படிநிலை நோக்கி அவன் சொந்த முயற்சியில் உயர்வானின் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற பெயரை உலகில் பெருமான் எனில் அதுவே உண்மையில் எனக்கும் நான் கற்பித்த கல்விக்கும் உண்மையில் பெருமை மகத்துவம் என்ற உன்னதமான எதிர்பார்ப்பை மட்டுமே ஒரு ஆசிரியர் தன் மாணவரத்தில் கொண்டிருப்பான் உண்மையில் அந்த மன ஓட்டம் புரிந்து அவர்களின் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து குருவை மிஞ்சிய சிஷ்யனாக தன்மானம் ஒழுக்கம் தேச சிந்தனை உள்ள பொறுப்பான சமூக குடிமகனாக எதிர்காலத்தில் மிளிர்வதே ஒவ்வொரு மாணவனும் அவனது ஆசிரியர்களுக்கு வாழ்நாளில் தரும் உயர்ந்த பட்ச குரு தட்சணையாக இருக்க முடியும். அதை உணர்ந்து ஒவ்வொரு மாணவனும் தன் ஆசிரியருக்கான குரு தட்சணையை அப்பழுக்கில்லாமல் கொடுத்தாலே குருவின் மனம் குளிரும். அவர்களின் ஆசியோடு தேசமும் சுபிட்சம் அடையும்.

உலகில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன் மாணவர்களை வழி நடத்தும் அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக தங்களின் நிகழ்கால உழைப்புகளை அர்ப்பணிப்போடு வழங்கும் ஒவ்வொரு ஆசிரியனுக்கும் இன்றைய குரு உற்சவ நாளில் பாதம் பணிந்த வணக்கங்கள். நன்றிகள் உங்களாலே உலகம் நல்ல மாணாக்கர்களை பெறுகிறது .சமூகம் நல்ல குடிமக்களை பெறுகிறது .உங்களாலே உலகம் நன் மக்களைப் பெற்று இயங்குகிறது. உங்களின் உழைப்பும் முயற்சியும் அர்ப்பணிப்பும் என்றைக்கும் போற்றுதலுக்குரியது. எங்களின் குருக்களுக்கு எங்களின் பாதம் பணிந்த வணக்கங்கள் வந்தனங்கள்.

குருவடி சரணம்

திருவடி சரணம்


Share it if you like it