நந்தி சின்னமா… அப்ப ஓட்டு வேணாமா..? திருமாவுக்கு இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியம் கேள்வி!

நந்தி சின்னமா… அப்ப ஓட்டு வேணாமா..? திருமாவுக்கு இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியம் கேள்வி!

Share it if you like it

செங்கோலில் நந்தி சின்னம் இருப்பதால் புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறும் திருமாவளவன், நந்தியை வழிபடுவோர் ஓட்டு வேண்டாம் என கூறுவாரா? என்று இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செங்கோலில் நந்தி உருவம் இடம் பெற்றிருப்பதால் புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. திருமாவளவன் கூறியிருக்கிறார். தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல, சைவர்கள் என்று திருமாவளவன் சமீபத்தில் கூறியிருக்கிறார். அப்படியானால் நந்தி என்பது சைவ சமயம் சார்ந்ததுதானே? சைவத்தின் தலைமை பீடமாக விளங்கும் சிதம்பரம் சிவாலயம் அமைந்திருக்கும் தொகுதியில்தானே திருமாவும் எம்.பி.யாக வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்த வகையில், தனது தொகுதியின் பிரதான அடையாளமான நந்தியை இவர்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டும். சொந்தம் கொண்டாட வேண்டும். அவர் மட்டுமல்ல, யார் புறக்கணித்தாலும் இந்த மண்ணின் புராதன அடையாளமான நந்தியம் பெருமான் எப்போதும் பார்லிமென்டில் வீற்றிருக்கப் போகிறார். ஆகவே, இனிமேல் திருமாவளவன் சபைக்கு போக மாட்டாரா, பதவியை எப்போது ராஜினாமா செய்யப் போகிறார்? என்று கேள்வி எழுகிறது. நந்தியை வழிபடும் பக்தர்களின் ஓட்டு வேண்டாம் என்று கூற அவருக்கு தைரியம் இருக்கிறதா? இவரை சிதம்பரம் தொகுதி மக்கள் திரும்ப பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it