தஞ்சாவூரில் டாஸ்மாக் மது குடித்த இருவர் உயிரிழந்த நிலையில், விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் வாங்கிய குவார்ட்டர் மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்ததால் குடிமகன்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ளது அரசக்குழி கிராமம். இங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் நேற்று கனஜோராக விற்பனை நடந்து கொண்டிருந்தது. அப்போது, சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராம்கி என்பவர், 130 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டிலை, 10 கமிஷனோடு சேர்த்து 140 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு சென்றார். அருகிலுள்ள பாருக்குச் சென்று உற்சாகத்துடன் மதுபாட்டிலை திறக்க முயன்ற ராம்கிக்கு கடும் அதிர்ச்சி. காரணம், மதுபாட்டிலில் இறந்த நிலையில் பல்லி ஒன்று மிதந்திருக்கிறது.
இதைக் கண்டு அதிர்ச்சி பிளஸ் ஆத்திரமடைந்த ராம்கி, இதுபற்றி கடை விற்பனையாளரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, விற்பனையாளரோ மழுப்பலாக பதிலளித்துவிட்டு, வேறு மதுபாட்டில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூலாக கூறியிருக்கிறார். ஆனால், இதை ஏற்க மறுத்த ராம்கி, பல்லி விழுந்த மதுபாட்டிலை தரமறுத்துவிட்டார். இதனிடையே, மது பாட்டிலில் பல்லி கிடந்த விவகாரம் மற்ற குடிமகன்கள் மத்தியிலும் பரவியது. இதையடுத்து ஒன்று கூடிய குடிமகன்கள், மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
அப்போது, தரமில்லாத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல்லி இறந்து கிடக்கும் மதுபாட்டிலை தெரியாமல் தான் குடித்து இறந்திருந்தால் தனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் என்றும் கூறிய ராம்கி, அசல் விலையை விட பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் வீதம் அதிகமாக விற்பனை செய்வதாகவும் குறிப்பிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.