எலி கடித்த பழங்களில் ஜூஸ்… ஜாபர்கான்பேட்டையில் அட்டூழியம்!

எலி கடித்த பழங்களில் ஜூஸ்… ஜாபர்கான்பேட்டையில் அட்டூழியம்!

Share it if you like it

சென்னையில் எலி கடித்த மற்றும் அழுகிய பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், உடல் சூட்டைத் தணிக்க பொதுமக்கள் கண்ணில் படும் கடைகளில் எல்லாம் ஜூஸ் வாங்கி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே, சென்னையில் திரும்பிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஜூஸ் கடைகள் முளைத்துவிட்டன. மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிய பழங்களை வைத்து மலிவான விலையில் வாங்கி வந்து, ஜூஸ் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள ஜூஸ் கடைகளில் தரமற்ற, அழுகிய பழங்களைக் கொண்டு ஜுஸ் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் வைக்கப்பட்டிருந்த பழங்களின் தரத்தை பரிசோதித்தனர். இதில், எலி கடித்த பழங்களும் சிக்கியதுதான் ஹைலைட். இது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, நீங்களோ அல்லது உங்களது குடும்பத்தினரோ இந்த பழத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸைக் குடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பிய அதிகாரிகள், இந்த பழத்தில் நான் ஜூஸ் போட்டுத் தருகிறேன், நீ குடி என்று கடைக்காரரிடம் கூறி, பீதியை கிளப்பினார். பின்னர், அங்கிருந்த பழங்களை பறிமுதல் செய்ததோடு, கடைகளுக்கும் சீல் வைத்துவிட்டு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். அதிகாரிகள் ஆய்வு செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it