அமர்நாத் யாத்திரை சென்று வந்திருக்கும் நடிகை சாய்பல்லவி, தனது பயணம் குறித்து மிகவும் சிலாகித்திருக்கிறார்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் படுகர் இன குடும்பத்தில் பிறந்தவர் சாய்பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மாரி -2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடத்ததால் சற்று பிரபலமானார். தொடர்ந்து, என்.ஜி.கே. என்கிற படத்திலும் நடத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். எனினும், நடிகை சாய்பல்லவியை பொறுத்தவரை, எவ்வளவு பெரிய நடிகர்கள் நடிக்கும் படம் என்றாலும் தனக்கு நடிப்பதற்கு வாய்ப்புள்ள கனமான கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார். இதனால், பெரியளவில் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இப்படி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் சாய்பல்லவி. குறிப்பாக, ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட சாய்பல்லவி, சமீபத்தில் அமர்நாத் கோயிலுக்கு புனித யாத்திரை சென்று வந்தார். அவருடன் அவரது பெற்றோரும் யாத்திரையில் பங்கெடுத்தனர். இப்பயணம் குறித்துத்தான் சாய்பல்லவி மிகவும் சிலிர்த்திருக்கிறார். அதாவது, “வயதான தனது பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு இந்த புனித யாத்திரையை மேற்கொண்டபோது, அவர்களுக்கு ஏற்பட்ட மூச்சிரைப்பு, நெஞ்சு வலி, பனிப்பொழிவினால் ஏற்பட்ட சறுக்கல்கள் போன்றவை நேரிட்டபோது, கடவுளை நோக்கி எதற்காக இவ்வளவு தூரத்தில் இருக்கிறாய் என்று கேள்வி எழுப்பத் தோன்றியது.
அதேசமயம், நாங்கள் நல்லபடியாக தரிசனம் செய்து திரும்பி வந்தபோது, பலர் தங்களது பயணத்தை முழுவதுமாக தொடர முடியாமல் பாதியிலேயே ‘முடித்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. அப்போதுதான் என்னுடைய கேள்விக்கான விடையும் கிடைத்தது” என்று இந்த பயணம் குறித்து சற்று விரிவாகவே சிலாகித்துக் கூறியிருக்கிறார் சாய்பல்லவி.